‘வரி பயங்கரவாதத்தில் இருந்து நம்மை விடுவிக்க வந்ததே ஜிஎஸ்டி’ - ‘தி இந்து’ பயிலரங்கில் வர்த்தக சங்க தலைவர் கருத்து

‘வரி பயங்கரவாதத்தில் இருந்து நம்மை விடுவிக்க வந்ததே ஜிஎஸ்டி’ - ‘தி இந்து’ பயிலரங்கில் வர்த்தக சங்க தலைவர் கருத்து
Updated on
3 min read

‘வரி பயங்கரவாதத்தில் இருந்து நம்மை விடுவிக்க வந்ததே ஜிஎஸ்டி’ என்று தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

‘தி இந்து’ நாளிதழ், எஸ்.பி.ஆர். மார்க்கெட் ஆஃப் இந்தியா நிறுவனம், கலால், சுங்க வரித் துறை, இந்திய தொழில் வர்த்தக சபை, தென்னிந்திய தொழில் வர்த்தக சங்கம் இணைந்து ஜி.எஸ்.டி குறித்த சிறப்பு பயிலரங்கை கோவை-அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியை ‘தி இந்து’ மண்டல துணை மேலாளர் கே.செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். கலைமணி பாலகிருத்திகாவின் இறைவணக்கப் பாடலுடன் பயிலரங்கு தொடங்கியது.

பயிலரங்கை தொடங்கிவைத்து, மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரித் துறை இணை ஆணையர் என்.ராம்குமார் பேசியது:

வரி விதிப்பு முறையில் உருவாகியுள்ள இந்த மாற்றத்தை ஏற்க அனைவரும் தயாராக வேண்டும். தற்போதுள்ள வரி விதிப்பு முறையிலிருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு மாறுவது அவசியம். இதற்கு உதவுவதற்கு மத்திய கலால் மற்றும் சுங்க வரித் துறையின் சேவை மையம் தயாராக உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த வரி விதிப்பு முறையில், அனைத்துப் பணிகளும் ஆன்லைன் மூலம் இருப்பதால், வரி தாக்கல் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும் என்றார்.


(அடுத்த படம்) பயிலரங்கில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் வனிதா மோகன் பேசியது:

28 சதவீத வரி விதிப்பு தொழில், வர்த்தக துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வரி விதிப்பு முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உதவிக்கரம் நீட்டியுள்ள ‘தி இந்து’வுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக இந்திய தொழில், வர்த்தக சபை சார்பில் தொடர்ந்து பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்த உள்ளோம். வரி விதிப்பில் மாற்றம் கோரி ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் மனுக்கள் அளித்துள்ளோம். நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

‘தி இந்து’ வணிக வீதி பகுதியில் கட்டுரைகள் எழுதி வரும் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் பேசியது:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையானது 1954-ல் பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது 158 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் 5 முதல் 28 சதவீதம் வரை வரி நிர்ணயிக்கப்பட்டு, வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள உள்ளன. பல்வேறு பெயர்களில் வரி வசூலிக்கப்படுவது தடுக்கப்பட்டு, ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த வரி விதிப்பு முறையால், வரிக்கு வரி விதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது என்றார்.

தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் பேசியது:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை குறித்து வணிகர்கள் அஞ்சத் தேவையில்லை. மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். வணிகர்கள் ரசீது போடுவதற்கு மட்டும்தான் தனிப்பட்ட சாஃப்ட்வேரைப் பயன்படுத்த வேண்டும். மற்ற அனைத்துமே ஜி.எஸ்.டி.என். போர்ட்டல் மூலம்தான் இருக்கும்.

உண்மையில், வரி பயங்கரவாதத்திலிருந்து நம்மை விடுவிக்க வந்ததே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை. தற்போதைய வரி விதிப்பு முறைகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு இது தீர்வைத் தரும். வரி தாக்கலின்போது அறியாமல் நிகழும் தவறுகளுக்காக ஓராண்டுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இடம் பெற்றிருப்பதால், தனிப்பட்ட முறையில் வரி நிர்ணயம் என்பது இருக்காது. ஜி.எஸ்.டி.என். போர்ட்டல் ஒரு மாதத்துக்கு சுமார் 300 கோடி ரசீதுகளை ஆய்வு செய்யும். எனவே, வரி ஏய்ப்பவர்களுக்குத்தான் இது சுனாமியாக இருக்கும். நேர்மையான வணிகர்கள், நுகர்வோருக்கு இது வரப்பிர சாதமாக இருக்கும் என்றார்.

எஸ்.பி.ஆர். மார்க்கெட் ஆஃப் இந்தியாவின் சேவைகள், செயல்பாடுகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

‘தி இந்து’ மண்டல உதவிப் பொதுமேலாளர் எம்.ஜெகதீஷ்குமார் நன்றி கூறினார்.

விவாதத்தில் சில வினாக்களும்…விடைகளும்…

இந்த நிகழ்ச்சியில் ‘தி இந்து’ வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.

எஸ்.நடராஜன்: வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க ஜி.எஸ்.டி. சட்டத்தில் வாய்ப்புள்ளதா?

எஸ்.ரத்தினவேல்: தெரியாமல் வரி ஏய்ப்பு செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும். தெரிந்தே வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டால், ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

சரவணன்: எடை அளவீடு கருவிகளுக்கு 18 மற்றும் 28 சதவீதம் என வெவ்வேறு வரி விதிப்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளதே?

என்.ராம்குமார்: இதில் நிச்சயம் மாற்றம் வரும். ஏதாவது ஒரு வரி நிர்ணயம் செய்யப்படும்.

பிரபாகரன்: ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதே?

என்.ராம்குமார்: ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்துள்ளது.

இதேபோல, வாசகர்களின் ஏராளமான சந்தேகங்கள், கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in