

திமுக தலைவர் கருணாநிதியின் கடிதம், அறிக்கை, பேட்டி ஆகியவற்றை செல்போன்களில் குறுஞ்செய்தியாக அனைவரும் படிப்பதற்கான வசதியை திமுக ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதியை சனிக்கிழமை கருணாநிதி தொடங்கி வைத்தார்.
சோஷியல் நெட்வொர்க் எனப்ப டும் சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றை தற்போது அதிகமானோர் பயன் படுத்தி வருகின்றனர். பிரபலங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் சாதா ரண மக்களும் பெருமளவு பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி, தனது பெயரில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளங்களில், வலை தளப்பக்கங்கள் மற்றும் கணக்கு வைத்துள்ளார். அந்தப் பக்கங்களில், கருணா நிதியின் அறிக் கைகள், பேட்டி, கடிதம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் கட்சியின் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த சமூக வலைதளப் பக்கங்களை, கட்சியின் நிர்வாகிகள் என்.நவீன் மற்றும் எஸ்.சுரேஷ் ஆகியோர் நேரடியாக கவனித்து வருகின்றனர்.
இதற்கு அதிக வரவேற்பு இருப்பதால், தற்போது புதிதாக குறுஞ்செய்தி சேவையையும் திமுக துவங்கியுள்ளது. இந்தப் புதிய வசதியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமையன்று கருணாநிதி தொடங்கிவைத்தார்.
இதன்மூலம், கருணாநிதியின் கடிதம், அறிக்கை, பேட்டி மற்றும் தலைமை அலுவலக அறிவிப்புகளை குறுஞ்செய்தியாக செல்போன்களில் பெற முடியும். இவ்வசதியைப் பெற விரும்புவோர், தங்களது செல் போன் எண்ணிலிருந்து DMK என டைப் செய்து, பின்னர் சிறிது இடை வெளி விட்டு, தங்களது மாவட்டப் பெயரை டைப் செய்து, 56070 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்புவோருக்கு, பிப்ரவரி 15-ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இந்தத் தகவல்களை திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுஞ்செய்தி சேவைக்கு தனியாகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என தலைமை அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களைக் கவரவும் அனைத்து தரப்பு மக்களிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடம் தங்களது செய்திகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த தொழில்நுட்ப ரீதியான திட்டத்தை திமுக அறிமுகப்படுத்தி உள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்..