

வாகனக் கடனுக்கு ஈடாக வாடிக்கை யாளரிடமிருந்து அசல் வாகன பதிவுச் சான்றை (ஆர்.சி) நிதி நிறுவனங்கள் வாங்கி வைத்துக்கொள்வது தேவையற்றது என்று சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கே.சிவக்குமார் என்பவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடனைப் பெற்றுள்ளார். அந்த வாகன கடனை தவணை முறையில் கடந்த 2012-ம் ஆண்டு முழுமையாக செலுத்திய பிறகு, அந்த நிதி நிறுவனத்தினர் நிலுவையில்லாச் சான்றை (நோ டியூ) அளித்துவிட்டனர். ஆனால், கடனுக்கு ஈடாக அவரிடமிருந்து பெறப்பட்ட வாகனத்தின் அசல் பதிவுச் சான்றை (ஆர்.சி) பல முறை கேட்டும் திருப்பி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சேவை குறைபாடு, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.93 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று கோரி சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சிவகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குறைதீர் மன்றத்தின் தலைவர் பி.ராமலிங்கம், உறுப்பினர் கே.அமலா ஆகியோர் விசாரணைக்குப் பிறகு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரரிடமிருந்து கடனுக்கு ஈடாக பெறப்பட்ட அசல் வாகன பதிவுச் சான்றை முறையாக பாதுகாத்து, கடனை திருப்பிச் செலுத்திய பிறகு அவரிடமே ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், வாடிக்கையாளரின் முக்கிய அசல் சான்றை நிதி நிறுவனம் தொலைத்துவிட்டது அதன் கவனக்குறைவை காட்டுகிறது. மேலும், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வழக்கமாக வாகன கடன் விவரமானது தொடர்புடைய வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அசல் சான்றிதழில் பதிவு செய்யப்படுகிறது. எனவே, கடனுக்கு ஈடாக அசல் வாகன பதிவுச் சான்றை வாங்கி வைத்துக்கொள்வதே தேவையற்றது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது நிதி நிறுவனத்தினர் மாற்று (டூப்ளிகேட்) வாகன பதிவுச் சான்றிதழைப் பெற்று, மனுதாரரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அதைப் பெறுவதற்கும் மனுதாரர் பல இன்னல்களை சந்தித்துள்ளார். எனவே, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்குச் செலவாக ரூ.5,000-த்தை தொடர்புடைய நிதிநிறுவனம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இழுத்தடிப்பு செய்யும் நிறுவனங்கள்
இதுதொடர்பாக கன்சியூமர் அசோசியே ஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறிய தாவது:
வாகனக் கடனை வாடிக்கையாளர் திருப் பிச் செலுத்தாமல் போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் அசல் வாகன பதிவுச் சான்றை தனியார் நிதி நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன. கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் சில நிறுவனங்கள் அசல் சான்றை முறையாக திருப்பி அளிக்காமல் இழுத்தடிப்பு செய்வதால் வாடிக்கையாளர்கள் அவதிக் குள்ளாகின்றனர்.
இந்நிலையில், கடன் வழங்கும்போது அதற்கு ஈடாக அசல் வாகன பதிவுச் சான்றை வாங்கி வைத்துக்கொள்வது தேவையற்றது என நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
நுகர்வோர் நீதிமன்றம் கூறியுள்ள இந்த கருத்தை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து அனைத்து தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.