இரும்புத் தாது வடிவில் திருவண்ணாமலைக்கு ஆபத்து!

இரும்புத் தாது வடிவில் திருவண்ணாமலைக்கு ஆபத்து!
Updated on
2 min read

# தஞ்சைக்கு அடுத்ததாக திருவண்ணாமலையில் அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. கரும்பு, பயறு வகைகள், தோட்டப் பயிர்கள், சிறுதானியங்களும் இங்கு அதிகம் பயிரிடப்படுகின்றன. ஆனால், போதுமான அளவு பாசன வசதி இல்லை. செய்யாறு, தென் பெண்ணை ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. ஏரிகள் தூர்வாரப்படாததால் அவையும் பாசனத்துக்குப் பயன்படுவது இல்லை. சாத்தனூர் அணையில் தண்ணீர் இருப்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.

# பொய்த்துப்போன மழையால் துவண்டுகிடக்கும் விவசாயிகளுக்கு இரும்புத் தாது வடிவில் ஆபத்து வந்துள்ளது. கவுத்தி மலை, வேடியப்பன் மலைகளில் 33 சதவீதம் இரும்புத் தாது இருப்பது தெரிந்ததும், ஜிண்டால் நிறுவனத்துடன் கை கோத்து அதை வெட்டி எடுக்கத் திட்டமிடுகிறது மத்திய அரசு. இதனால் சுமார் மூன்று லட்சம் மரங்கள் வெட்டப்படும். வன விலங்குகள் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு, நுரையீரல் மற்றும் காது பாதிப்பு என இதன் அழிவுகள் அதிகம். மலைகளை வெட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இந்த மலைகளைச் சுற்றியுள்ள 51 கிராமங்களின் விவசாயம் அழியும் என்ற பயம் இந்தப் பகுதி மக்களுக்கு உள்ளது.

# திருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் மலர் சாகுபடி அதிகம். இங்கிருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருக்கு மலர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல நேரங்களில் மலர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை திருவண்ணாமலையில் தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை.

# திருவண்ணாமலை - சென்னைக்கு இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் பாதையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிவிட்டு, அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாதையில் திருவண்ணாமலை - சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. எனவே, சென்னைக்கு ரயில் விட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதேபோல், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்குப் புதிய வழித் தடம் அமைக்கும் திட்டமும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

# ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரயில்வே சந்திப்பில் மேம்பாலம் இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். இதனால், வாகனங்கள் தொலை தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

# ஜோலார்பேட்டையில் ரயில்வே பள்ளிக்குத் தாரளமாகவே இடம் இருக்கிறது. ஆனால், பள்ளி தொடங்கப்படாமல் இருப்பது ரயில்வே ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

# திருவண்ணாமலை காந்தி நகரில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. பல ஆண்டுகளாகவே அந்தப் பள்ளி வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அந்தப் பள்ளியைச் சொந்தக் கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா பயிர் கணிசமாகப் பயிரிடப்பட்டுவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய் வித்து உற்பத்தியாளர்கள் இணையம் என்று அழைக்கப்படும் எண்ணெய் வித்துத் தொழிற்சாலை திருவண்ணாமலையில் 1996-ல் தொடங்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலை திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களில் உள்ள மணிலா பயிரிடும் விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது. ஆனால், நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி கடந்த 2002-ம் ஆண்டு தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். இதனைத் திறந்து மீண்டும் மணிலா எண்ணெய் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

# ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நடக்கின்றன. அப்படிச் செய்யும்போது அடி அண்ணாமலைப் பகுதியில் புதிய வழித்தடம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

# திருவண்ணாமலை கோயில் உருவாவதற்கு முன்பே உருவானது ஆதி அண்ணாமலையார் கோயில். அங்கு வலதுபுறமாகச் சுற்றி வந்துதான் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதுதான் பக்தி சார்ந்த மரபாகவும் உள்ளது. ஆனால், புதிய பாதை ஆதி அண்ணாமலையார் கோயிலுக்குப் பின்புறம் அமைந்தால், பக்தர்கள் இடது புறமாகத்தான் சுற்றிவர வேண்டியிருக்கும். இதனால், கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்யும் பணியை வரவேற்பதாகக் கூறும் பக்தர்கள், ஆதி அண்ணா மலையார் கோயிலுக்கு வலது புறம் சுற்றிவரும்படி புதிய வழித்தடம் அமைக்கக் கூடாது என்கின்றனர்.

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் வழியாக கிருஷ்ணகிரி வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கின்றன. இந்தப் பணிகள் நிறைவடைய மேலும் சில காலமாகும் என்று கூறப்படுகிறது. இதனால், விபத்துகளும் அடிக்கடி நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

# நந்தன் கால்வாய்த் திட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தொடங்குகிறது. கீழ்பென்னாத்தூர், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 15 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பென்னாத்தூர் அணைக்கட்டு சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே சேதம் அடைந்துவிட்டது. அந்த அணை மற்றும் நந்தன் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in