

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ரகசியமாக சரணடைந்து ஜாமீன் பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், அலங்கார்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதிபாண்டியன் (54). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மூலக்கரை பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் பசுபதிபாண்டியன் குற்றம்சாட்டப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதிபாண்டியன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால், பசுபதிபாண்டியன் குடும்பத்துடன் திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் குடியேறினார். ஆனாலும், பண்ணையார் குடும்பத்தினர், பசுபதிபாண்டியன் தரப்பினர் ஒருவரை ஒருவர் பழிதீர்க்க பகையுடன் சுற்றி வந்தனர்.
அ.தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக மனைவி ஜெசிந்தா பாண்டியனுடன், பசுபதிபாண்டியன் தூத்துக்குடி சென்றபோது, அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவரது மனைவி இறந்தார். பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் 2012 ஜனவரி10-ம் தேதி பசுபதி பாண்டியன் தனது வீடு முன் உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வந்த கும்பல் பசுபதி பாண்டியனைக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்த வழக்கில், தூத்துக்குடி பழையகாயலைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்(38) உள்பட 18 பேர் மீது திண்டுக்கல் தாண்டிக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவந்தனர். இவ்வழக்கில் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாகியிருந்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டவர்களை கொலை செய்ய பசுபதி பாண்டியன் கோஷ்டியினர் முயன்றனர். திண்டுக்கல் கரட்டழகன்பட்டி கவுன்சிலர் முத்துபாண்டியனை சில மாதங்களுக்கு முன், பசுபதிபாண்டியன் கோஷ்டியினர் நீதிமன்ற வளாகம் முன் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்தனர். எனினும் அவர் உயிர் தப்பினார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் விருதுநகர் அருகே, பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வம் கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சுபாஷ் பண்ணையார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைய வருவதாக 3 மாதங்களாக அடிக்கடி தகவல் பரவியது. அதற்கு முன் அவரைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்.
போலீசார் உஷார் நடவடிக்கை யாலும், பசுபதிபாண்டியன் கோஷ்டியினர் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாலும், சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் சரணடைய வருவதைத் தவிர்த்துவந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் திடீரென்று காரில் வந்த சுபாஷ் பண்ணையார், பசுபதிபாண்டியன் கொலை வழக்கு விசாரணை நடைபெறும் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சையது சுலைமான் உசேன் முன் ஆஜரானார்.
அவரிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஓர் ஆண்டுக்கு முன் பெற்ற முன்ஜாமீன் உத்தரவைக் காண்பித்தார். சுபாஷ் பண்ணையார் சொந்த ஜாமீனில் செல்ல அவரது தரப்பில் வைகுண்டத்தைச் சேர்ந்த சக்திவேல், ஜெய்சங்கர் ஆகியோர் தலா ரூ.10,000 ஜாமீன் தொகை செலுத்தினர். இதையடுத்து, சுபாஷ் பண்ணையாருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். வரும் 26-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் காரில் சுபாஷ் பண்ணையார் புறப்பட்டுச் சென்றார்.