நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? - சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் விளக்கம்

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? - சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் விளக்கம்
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நிலவிவந்த அரசி யல் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகி யுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கினார். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று காலை 11 மணிக்கு நம் பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வுள்ளது.

வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?:

பேரவை கூடியதும் சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். அதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவையின் மொத்த பலம் 234. ஜெயலலிதா காலமானதால் தற்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். திருவாரூர் தொகுதி எம்எல்ஏவான திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, 232 எம்எல்ஏக்கள் மட்டுமே பேரவைக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், 117 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பெற்றதாக அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு முதல்வரின் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்களை தனித்தனியாக எழுந்து நிற்கச் செய்து அவர்களை எண்ணி முடிவினை பேரவைத் தலைவர் அறிவிப்பார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்பதா? வேண்டாமா? என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்வார்.

232 உறுப்பினர்களும் பேரவைக்கு வருகை தந்தால் 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால்தான் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற முடியும். இல்லையெனில் சட்டப்பேரவையில் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்களோ அவர்களில் பாதிக்கும்மேல் ஆதரவு இருந்தால் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதாவது, 200 எம்எல்ஏக்கள் மட்டுமே பேரவைக்கு வந்திருந்தால் 101 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் சமமான வாக்குகள் கிடைத்தால் பேரவைத் தலைவர் வாக்களிக்கலாம்.

ஆனால், 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டுமா அல்லது பேரவையில் இருப்பவர்களில் பாதிக்கும் மேல் இருந்தால் போதுமா என்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். மறைவின் போது 1988-ல் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது அதனை அன்றைய ஆளுநர் எஸ்.எல்.குரானா ஏற்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பேரவையில் கட்சிகளின் பலம்

சட்டப்பேரவையில் அதிமுக வுக்கு பேரவைத் தலைவரையும் சேர்த்து 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுக - 89, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு-1 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கக்கோரி பேரவைத் தலைவருக்கு மனு அளிக்கலாம். அதன் மீது பேரவைத் தலைவர் இறுதி முடிவை எடுப்பார் என சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் ‘தி இந்து’ விடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in