

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதால் தமிழகத்துக்கு தற்போது பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் 120-வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம், தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என்ற ஸ்டாலின் வலியுறுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்துக்கு தற்போது பொறுப்பு முதல்வர் தேவையில்லை. அரசியல் சட்டப்படி ஆட்சிக்கு தலைமை வகிக்க ஆளுநர் இருக்கிறார். முதன்மை செயலாளர், மூத்த அமைச்சர்கள் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதால் தற்போது பொறுப்பு முதல்வர் தேவையில்லை.
ராகுல் காந்தி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்ததில் எந்த அரசியலும் இல்லை. காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்ளும் அவசியம் வரவில்லை'' என்றார்.