

அதிமுக தற்போது இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில், இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் யார் பக்கம்? அவர்களின் மனநிலை என்ன என்பதை கேட்டறிந்தோம்.
கட்சிப் பிளவுபட்டிருக்கிறது உண்மைதான். சசிகலாவை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்காத நிலையில், அவர்களின் அடுத்த தேர்வாக ஓ.பி.எஸ். உள்ளார். இருப்பினும் அவரிடம் கட்சியோ, கொடியோ, சின்னமோ இல்லாத பட்சத்தில் நாங்கள் அவரை பின் தொடர்ந்து செல்ல இயலவில்லை. தற்போது கட்சியின் அவைத் தலைவராக செங்கோட்டையன் இருப்பதால், அவர் கட்சியை வழிநடத்திச் செல்ல வாய்ப்பு உண்டு, வரும் காலத்தில் ஓ.பி.எஸ். எங்கள் பக்கம் வர வாய்ப்பு உண்டு என்று அண்ணா தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.
இதுபற்றி அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அதிமுக தொழிற்சங்க நிர்வாகப் பிரிவுத் தலைவர் குபேரனிடம் கேட்டபோது, “எங்களது மண்டலத்துக்கு உட்பட்ட விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கப் பிரிவினரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கட்சிக் கொடி, சின்னம் இருக்கின்ற இடத்தில்தான் நாங்கள் இருப்போம். மேலும் எங்களது பேரவைச் செயலாளர் சின்னச்சாமியும், சசிகலா தலைமையையே தொடர்வதால் நாங்கள் அந்த அணிக்கு ஆதரவாக செயல்படுவோம்” என்றார்.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக 2-வது பணிமனையின் கிளைச் செயலாளர் நக்கீரன் கூறும்போது, “விழுப்புரம் கோட்டம் மட்டுமின்றி இதர 6 கோட்டப் பிரிவுகளில் உள்ள அதிமுக தொழிற்சங்கத்தினரும் கட்சிக் கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்றார்.