

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் அனைத்து நெடுஞ்சாலை மதுக் கடைகளும் மூடப்பட்ட நிலையில், பழைய மகாபலிபுரம் சாலையில் திருவான்மியூர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதுகிறது.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது, 'குடி'மகன்கள் டாஸ்மாக்கில் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்னும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள 3,316 மதுபான கடைகள் மூடப்பட்டன.
சென்னையில் மொத்தம் 315 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அவற்றில் 68 கடைகள் மூடப்பட்டன. மேலும், நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் உள்ள பார்களும் மூடப்பட்டதால், அங்கு மதுபான விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 90 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் குடிமகன்களின் 'குடி'மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.