

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கூடாரத்தை அகற்றி அவர்களை அடக்க முயற்சிப்பது விவசாயிகளிடம் கிளர்ச்சியை தூண்டும் செயல் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லியில் தமிழக விவசாயிகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து 37 நாட்களாக போராடி வந்தனர். இவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு, வேலை செய்யாமல், இன்ப, துன்பங்களை துறந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார்கள்.
விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் குறிப்பாக அனைத்து விவசாய சங்கம், அரசியல் கட்சிகள், பொது மக்கள் என நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை இதுவரையில் ஏற்காமல், பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது.
விவசாயிகளின் பலவிதமான போராட்டங்கள் அவர்களின் பரிதாப நிலையை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் 37 நாட்கள் கடந்த நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக்கொண்டு, டெல்லியிலேயே காத்துக்கிடக்கின்றனர். இச்சூழலில் நேற்றைய தினம் காவல்துறையினர் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்ற இடத்தில் இருந்த அவர்களின் கூடாரத்தைக் காலி செய்ய முயற்சித்தனர்.
மேலும் இந்த இடத்தை காலி செய்துவிட்டு செல்லுங்கள் என நிர்பந்தம் செய்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் தங்களின் நியாயத்தை எடுத்துக் கூறி, நாங்கள் இங்கிருந்து இப்போது செல்ல மாட்டோம் என கூறிய பிறகே காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர். விவசாயிகளின் கூடாரத்தை அகற்றி அவர்களை அடக்க முயற்சிப்பது விவசாயிகளிடம் கிளர்ச்சியை தூண்டும் செயலாகும்.
ஏற்கெனவே விவசாயிகள் வேதனையில் வாடி, வதங்கி மத்திய அரசின் நல்ல பதிலுக்காக காத்திருக்கின்ற சூழலில் இது போன்ற அசாதாரண சூழலை ஏற்படுத்துவது மத்திய பாஜக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. எனவே மத்திய பாஜக அரசு - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உடனடியாக அவர்களை பிரதமரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அதன் அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கின்ற அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நிறைவேற்ற வேண்டும். விவசாயத் தொழில் செழிப்பாக நடைபெற்று, விவசாய வர்க்கம் நிம்மதியாக இருந்தால் தான் நாட்டில் உள்ள பொது மக்களின் வாழ்வும் சிறக்கும்.
எனவே விவசாயத் தொழிலைக் காப்பாற்றவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும் தேவையான அனைத்து நல்ல முயற்சிகளையும் எடுத்து நாட்டினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை'' என்று வாசன் கூறியுள்ளார்.