

’சேவ் தமிழ்ஸ்’ என்ற அமைப்பு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சென்னையிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத் துறையில் பணியாற்றும் பெண்களிடையே, ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களுக்கு பணிப் பாதுகாப்பு இந்தத் துறையில் இல்லை என்று பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக திருமணம் ஆகும் வரை, பெண்கள் ஒரு விதமாக நடத்தப்படுவதாகவும், அதே பெண்கள் திருமணம் ஆன பின் அவர்கள் வேறு விதமாக நடத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
திருமணமான பெண்கள் மற்றும் தனிப் பெண்கள் தங்களின் பணியில் எவ்வளவுதான் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் மற்றும் தகுதியான பதவி உயர்வு போன்றவற்றில், பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.
திருமணம், குழந்தைப் பேறு கால விடுமுறைகளையும் கணக்கில் எடுத்து, திறன் மதிப்பீட்டை குறைப்பதால், பதவி மற்றும் சம்பள உயர்வு பாதிக்கப்படுவதாக பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகப்பேறு கால விடுமுறை
இந்தத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எட்டு மணி நேரத்துக்கும், அதிகமாக ஒன்பதரை மணி நேரம் வரை பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவதாகப் பலர் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு குழந்தைப் பேறு பெறுவதற்கான மகப்பேறு கால விடுமுறை போதிய அளவு வழங்கப்படுவதில்லை. பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளையோ, சட்டங் களையோ, இந்த நிறுவனங்கள் கடைபிடிப் பதில்லை என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருமணமான, குழந்தை பெற்ற பெண்கள், தங்களுடன் கொண்டு வரும் குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைப் பாதுகாப்பு மையம் அமைத்துத் தர, சில நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற பல பிரச்சினைகளால், பெரும்பாலான பெண்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவர்களை பணிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகக் கூறியுள்ளனர். தாங்களும் அதுபோன்ற மனநிலையில், வேறு வழியின்றி பணிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.