

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகம் மற்றும் இலங்கை இடையிலான கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது கன்னியாகுமரி கட லோரப் பகுதியில் இருந்து உள் தமிழகம் வரை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், இதர தமிழகத்தில் பரவலாகவும் லேசானது முதல் மிதமான மழை யும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, காரைக்கால் 172 மிமீ, நாகப்பட்டினம் 84, சேலம் 12, அதிராமபட்டினம் 10, வால்பாறை 8, பாம்பன், மதுரை தலா 1 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.