

தமிழக டிஜிபி ராமானுஜத்தை அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரி திமுக தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமானுஜத்தை மாற்றக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஓய்வு பெற்ற பிறகும் பணி நீட்டிப்பு அடிப்படையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக தமிழக டிஜிபி ராமானுஜம் பணி ஓய்வு பெற்ற நிலையிலும் தொடர்ந்து அதே பணியில் நீடிக்கிறார். ஆகவே டிஜிபி பதவியில் ராமானுஜம் தொடர்ந்து நீடிக்காத வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு விசாரணை மேற்கொண்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தவறாக புரிந்து கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.