Published : 29 Mar 2017 08:13 AM
Last Updated : 29 Mar 2017 08:13 AM

அதிமுகவின் 2 அணியினர், திமுகவினர் பணப் பட்டுவாடாவை தொடங்கி விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு

அதிமுகவின் இரு அணியினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இதை தடுத்து நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்க உள்ளோம் என தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மதிவாணன், கொருக்குப்பேட்டையில் உள்ள எழில் நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் நேற்று காலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அவரை ஆதரித்து அக்கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், விசாகன் ராஜா, தினகரன், மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் சுபமங்களம் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர்.

பிரச்சாரத்தின்போது நிருபர்களிடம் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் இதுவரை வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட செய்து தரவில்லை. குடிநீர், சுகாதாரம், சாலைகள் வசதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொகுதியில் உள்ளன. எனவே, இந்த முறை தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

அதிமுகவின் இரு அணிகளும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான பணியை தொடங்கிவிட்டனர். இதற்காக குடும்ப அட்டைகள் மூலம் பெயர்களை தேர்வு செய்து, கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என தனித்தனியாக பிரித்து பணம் கொடுப்பதற்கான வேலை நடந்து வருகிறது.

தேர்தல் ஆணையம் இதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார். பிரேமலதா விஜயகாந்த் ஏப்ரல் 3-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x