

சென்னை செங்குன்றத்தில் சோப்ஆயில் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டுவந்த ‘ஹெராயின்’ போதைப் பொருள் தொழிற்சாலையை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கி ருந்து ரூ.71 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை செங்குன்றம் புதூர் ஏரிக்கரை பகுதியில் உள்ளது ‘குபேரன் டிரேடர்ஸ்’ என்ற தொழிற்சாலை. சோப் ஆயில் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் இந்தத் தொழிற்சாலையில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தத் தொழிற்சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு அதி காரிகள் 7 பேர் நேற்று சோதனை நடத்தினர்.
தொழிற்சாலைக்குச் சொந்தமான கிடங்கிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கும் ஏராளமான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 11 கிலோ மெத்தாம் பீட்டமின், 56 கிலோ சூடோ எபெட்ரின், 90 கிலோ ஹெராயின் ஆகிய போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.71 கோடி. பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக மலேசியாவை சேர்ந்த ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து கேட்ட போது வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:
புதூர் ஏரிப்பகுதியில் குபேரன் டிரேடர்ஸ் சோப் ஆயில் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்திவந்தால், விமான நிலையத்தில் சோதனையில் தெரிந்துவிடும். இதனால், வெவ்வேறு பொருட்களோடு கலந்து ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கொண்டுவருகின்றனர். இவ்வாறு கலந்து எடுத்துவரப்படும் போதைப் பொருட்களைப் பிரித்து எடுக்கும் பணிதான் இந்த தொழிற்சாலையில் நடந்துவந்துள்ளது.
இதற்காக, கிடங்கில் இருந்து மூலப்பொருட்களை தொழிற்சாலைக்கு கொண்டுவந்து, அங்கு போதைப் பொருள் தயாரிக்கின்றனர். தயாரான போதைப் பொருட்களை மீண்டும் கிடங்குக்கு கொண்டுசென்று, அங்கி ருந்து நாட்டின் பல்வேறு மாநிலங் களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குபேரன் டிரேடர்ஸ் நிறுவனம், தமிழகத்தை சேர்ந்த ஒருவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் நிர்வாகம் முழுவதும் மலேசியாவை சேர்ந்த ஒருவரது கட்டுப் பாட்டில் இருந்துள்ளது. போதைப் பொருட்கள் தயா ரிக்கும் பணியும் அவரது தலைமையில்தான் நடந் துள்ளது. மலேசியாவை சேர்ந்த அந்த நபர் உட்பட 10 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.