Published : 26 Jun 2016 09:00 AM
Last Updated : 26 Jun 2016 09:00 AM

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை கிடைக்க அனைவரும் உதவ வேண்டும்: நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை கிடைக்க தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பொருளுதவி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையின் தேவை விளக்க விழா, தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழா, அறக்கொடை அறிமுக விழா ஆகிய நிகழ்வுகள் அடங்கிய முப்பெரும் விழா ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு சார்பில் சென்னை தியாகராய நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் கு.கல்யாணசுந்தரம், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் தலைமை தாங்கினார்.

ஹார்ட்வர்டில் தமிழுக்கு இருக்கை அமைக்கும் முயற் சியை மேற்கொண்ட விஜய் ஜானகிராமன் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, "தமிழுக்கு இருக்கை கிடைக்க ரூ.40 கோடி தேவைப்படுகிறது. நானும் எனது நண்பர் திருஞானசம்பந்தமும் ரூ. 6 கோடியை கொடுத்துள்ளோம். மீதமுள்ள தொகையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள்தான் தர வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

தமிழின் பெருமையை நாம் அறிவோம். அதனை உலகம் அறியச் செய்வதற்கான பணி களை முன்னெடுத்துள்ள விஜய் ஜானகிராமன் மற்றும் திருஞானசம் பந்தத்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சமஸ்கிருத ஆராய்ச்சியாளரான மேக்ஸ் முல்லர் மற்றும் அலக்ஸ் கூலியர் போன்றவர்கள் தமிழின் பெருமைகளை எடுத்துரைத் துள்ளனர்.

மேடைப் பேச்சுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் வியாபாரமாக தமிழை இங்குள்ளவர்கள் பயன் படுத்துகின்றனர். தமிழுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைக்கும் முயற்சியை இரண்டு தமிழர்களால் தொடங்க முடியுமென்றால், ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் ஏன் அதனை செய்ய முடியாது.

இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு தரமணியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப் பட்டது. ஆனால், அங்கு ஒருவர்கூட நிரந்தர ஆராய்ச்சியாளர் கிடையாது. அப்படி இருக்கும்போது தமிழ் எப்படி வளரும். தமிழுக்கு ஹார்வர்டில் இருக்கை கிடைக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பொருளுதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசும்போது, "நமது தமிழ்மொழி உலகெங்கும் பரவ நாம் அதற்கு கொடை அளிக்க வேண்டும். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தை தொடங்கிய யேலின் கல்லறை சென்னையில் உள்ளது. சென்னையிலிருந்து ஒருவர் யேல் பல்கலைக்கழகம் தொடங்க முடியுமென்றால், நம்மாலும் இதைச் செய்ய முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் பேசும்போது, "இந்தி யாவில் செம்மொழிகளின் ஆராய்ச்சி என்பது மிக மோசமாக உள்ளது. இதுபற்றி ஷெல்டன் பொல்லாக் போன்ற வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் கூறியுள் ளனர். தமிழுக்கு இது மிகவும் பொருந்தும். உலக பிரசித்தி பெற்ற ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழி ஆராய்ச்சிக்காக பேராசிரியரைத் தேடியபோது கிடைக்கவேயில்லை. அப்படி கிடைத்த ஒருவரும் ஓய்வு பெற்று சென்றுவிட்டார் என்று ஷெல்டன் சொல்லியுள்ளார்.

தமிழுக்கு ஹார்வர்டில் இருக்கை கிடைக்க ‘தி இந்து’ குழுமம் முழு ஒத்துழைப்பு தரும். இதற்காக கொடை அளிப்பவர்க ளின் பெயர் விவரம் ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும் ஹார்வர்டில் இருக்கை கிடைக்கிற பட்சத்தில் சங்க இலக்கியத்தின் ஆராய்ச்சி பிரதானமாக இருக்க வேண்டும்’ என்றார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும் போது, "தமிழ் என்பது மொழியல்ல. அது ஒரு வாழ்வியல். தமிழ் சாதாரண மொழி கிடையாது. தமிழைக் கொண்டு திட்டினால், கடவுள்கூட பொறுப்பார் என்று பாடல்கள் உள்ளன. ஈராயிரம் ஆண் டுகள் பழமை கொண்ட தமிழின் பெருமையை உலகறியச் செய்ய தமிழுக்கு இருக்கை கிடைக்க வேண்டும். இதற்கு தமிழர்கள் பெரி தும் உதவ வேண்டும்’ என்றார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது, "21 ஆயிரம் மாணவர்களையும் 2 ஆயிரம் பேராசிரியர்களையும் கொண்ட ஹார்வர்டில் தமிழுக்கு இருக்கை கிடைத்தால், தமிழுக் கென்று மிகப்பெரிய நூலகம் கிடைக் கும். இதன்மூலம், தமிழ் மொழியை உலகின் மற்ற செம்மொழிகளோடு ஒப்பிட்டு சோதனைகளை செய்ய முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x