

காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் அருகில், வெள்ளகுளம் தெருவில் சந்தைவெளியம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தேர்தல் நேரத்தில், வாக்காளர்களை கவரும் விதமாக, உரிய அனுமதியின்றி இக்கோயில் கட்டப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் ராஜம்மாள் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், கோயில் திருப்பணி நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்தனர். திருப்பணி மேற்கொண்டு வரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பல்வேறு உபயதாரர்களின் நன்கொடை மூலம் ரூ.3.10 லட்சத்தில் மூலவர் விமானம் சீர் செய்யும் பணி, ரூ.9 லட்சம் செலவில் புதியதாக 3 நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணி ஆகியவற்றுக்கு மட்டும், வேலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போது மூலஸ்தானம் மீது மகா மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு இந்து அறநிலையத்துறையிடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கோயில் திருப்பணியை பறக்கும் படை அதி காரிகள் நிறுத்திவைத்துள்ளனர்.