Published : 28 Sep 2016 12:56 PM
Last Updated : 28 Sep 2016 12:56 PM

மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ வழங்க பரிந்துரை: பயிற்சியாளர் சத்யநாராயணன் தகவல்

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, இந்திய விளையாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருது, அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணன் கூறினார்.

பிரேசிலில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு, அவர் கல்வி பயிலும் சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது கல்லூரி அளித்த ஊக்கத்துக்கும், எனக்கு உதவிய அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சேலத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற செயற்கை இழை ஆடுகளம் வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய விளையாட்டு துறை மூலம் இதற்கு ஏற்பாடு செய்வேன். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு முன்னதாக எனது உயரம் சவாலானதாக இருந்தது. பிற நாட்டினரை காட்டிலும் நான் உயரம் மிக குறைவு என்பதால், பதக்கம் வெல்வது சாத்தியமில்லை என பலரும் கருதினர்.

எனது பயிற்சியாளர் சத்யநாராயணனின் ஊக்கத்தின் மூலம் இந்த பெரும் சாதனை சாத்தியமானது. திறமைகள் பல இருந்தும், கிராமப்புற இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்காததால் சாதனைபுரிய முடியாத நிலையில் உள்ளனர். இதுபோன்ற விளையாட்டு வீரர்களை அரசு கண்டுபிடித்து உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் பல தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பயற்சியாளர் சத்யநாராயணன் கூறியதாவது:

மாரியப்பனின் கடுமையான பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது. இவர் நிகழ்த்திய சாதனையையொட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிட இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதினை, மாற்றுத் திறனாளிகள் யாரும் இது வரை வாங்கியதில்லை. இந்தியாவிலேயே முதல் முறையாக கேல்ரத்னா விருது மாரியப்பனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்ற விருதுகளை மாரியப்பன் பெறுவது மற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அமையும்.

சாதனை படைத்த மாரியப்பனை சந்திக்க இந்திய குடியரசுத் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் நேரம் ஒதுக்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருவாகி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இங்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் அதிநவீன செயற்கை இழை மைதானம் அரசு ஒத்துழைப்புடனோ அல்லது தனியார் பங்களிப்போடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகள் இருப்பதால் மாரியப்பனை பெங்களூருக்கு அழைத்துச் சென்று பயற்சி அளிக்கவுள்ளேன். அங்கு அவர் பயற்சி பெற்றாலும், தமிழக வீரர் என்ற பெயரிலேயே அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x