Published : 11 Dec 2013 09:11 AM
Last Updated : 11 Dec 2013 09:11 AM

ஏற்காடு வெற்றியால் பதவியை தக்கவைத்த அதிமுக நிர்வாகிகள்

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், பதவி பறி போகும் அச்சத்தில் கலங்கியிருந்த அமைச்சர்கள் நிம்மதியடைந்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. – தி.மு.க. நேரடிப் போட்டி காரணமாக, இரு கட்சித் தலைமையும் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறனும் போட்டியிட்டனர். தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அதிமுக மேலிடம் தேர்தல் பணிக்குழு உறப்பினர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

ஏற்காடு இடைத்தேர்தலில் பணியாற்றிட 32 அமைச்சர்கள் உள்பட வாரியத் தலைவர்கள், கழக அமைப்புச் செயலாளர்கள் என 61 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அனைத்துத் துறை அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஆளும் கட்சி வெற்றிக்காகக் கடுமையாகப் பணியாற்றினர்.

89.23% வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில் மொத்தம் 2,40,290 வாக்குகளில் 2,14,434 வாக்குகள் பதிவாயின. வரலாற்று சாதனையாக எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 89.23 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 290 பூத்துகளில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் ஆறு பூத்துகள் வரை அளிக்கப்பட்டது. ஆறு பூத்துகளுக்கு உள்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அமைச்சர்கள் தங்கியிருந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த முறை ஒரு லட்சம் ஓட்டுக்கும் அதிகமாக வித்தியாசம் காட்டி, திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்பது அதிமுக தலைமயின் குறியாக இருந்தது. திமுக ஆட்சியில் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததுடன், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வியைத் தழுவியது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஏற்காடு இடைத்தேர்தலை அதிமுக பயன்படுத்தி, திமுக.வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று விரும்பியது.

மின்வெட்டு, பால், பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே ஆளும்கட்சி ஏற்காடு இடைத்தேர்தலை சந்தித்தது. அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் அதிக வாக்குகளைப் பெற்றிட என்னென்ன தேவையோ அத்தனையும் வாக்காளர்களுக்கு செய்துகொடுத்தனர். அமைச்சர்கள் பணியாற்றிய பூத்துகளில் வாக்கு வித்தியாசம் குறைந்தால், பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். சிறப்பாகப் பணியாற்றி பதவியை தக்க வைத்துக்கொள்ள பணத்தை தண்ணீராக செலவு செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடந்தபோது, ஆளுங்கட்சி அமைச்சர்கள் படபடப்புடன், தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு பூத்திலும் வாக்கு வித்தியாசம் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். செய்தியாளர்கள் மற்றும் பூத் ஏஜென்ட்டுகளை தொடர்புகொண்டு வாக்கு விவரங்களையும், முன்னணி விவரத்தையும் கேட்டறிந்தனர். முடிவில் அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார் என்ற செய்தியைக்கேட்டு, ‘தலை’ தப்பிய சந்தோஷத்தில் திருப்தி அடைந்தனர்.

திமுக வேட்பாளர் மாறன் சொந்த ஊரான பூவனூரில் உள்ள 50வது பூத்தில் மட்டும் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 120 வாக்குகள் பெற்றிருந்தார். மற்றபடி 289 பூத்துகளிலும் அதிமுக வேட்பாளர் முன்னணி வாக்குகளைப் பெற்று 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அமைச்சர் பதவி பறிப்பு

கே.வி. ராமலிங்கம் அமைச்சர் பதவி சொந்த பிரச்சினைக்காகப் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பத், ரமணா, தோப்பு வெங்கடா சலம் ஆகிய அமைச்சர்களின் இலாகா மாற்றங்களும் நிர்வாக காரணத்தால் நடந்துள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலுக்கும் இவர்கள் இலாகா மாற்றம், பதவி பறிப்புக்கு தொடர்பில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x