

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சென்னையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்களும் பரவி வருகின்றன.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று சென்னை வந்த நீதிபதி கர்ணன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். நேற்றிரவே அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம் என்றும் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்றிருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையில் விருந்தினர் மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸார் எவரும் இதுவரை சென்னை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.