

உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும் என முதல்வர் ஜெயலலிதா தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
விநாயகப்பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள். சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்குக் காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்கு தடையின்றி சிறப்புடன் நடக்கும் என்பது மக்களின் இறை நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமான் அவதரித்த சதுர்த்தி நாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய பண் பாட்டுக்குச் சுடராய் அமைந்துள்ளது பெருமைக்குரிய விநாயகர் சதுர்த்தி விழா. அனைத்து மக்களிடையே நல்லிணக்கம் மேம்படவும், எங்கும் மகிழ்ச்சி வளம் பெருகவும் விநாயகப் பெருமானின் அருள் நிறை யட்டும்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என சமுதாயம் ஆசிரியர்களை இறைவனுக்கு சமமாக மதிக்கிறது.
இது நம் வினைகளைப் போக்கும் விநாயகர் சதுர்த்தியுடன் இணைந்து வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. விநாயகர் சதுர்த்தி தினத்துடன், ஆசிரியர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.