பழங்குடியினரை துன்புறுத்திய வனக்காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

பழங்குடியினரை துன்புறுத்திய வனக்காவலர்கள் மீது நடவடிக்கை தேவை: மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

தேனி பழங்குடியினரை துன்புறுத்திய வனக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பி.டில்லிபாபு வெளியிட்ட அறிக்கையில், ''தேனி மாவட்டத்தில் பளியன் என்னும் பழங்குடி மக்கள் உள்ளனர். இவர்களில் சிலர், சிறுவன மகசூல் பொருட்களான தேன், கிழங்கு, நன்நாவிவேர் உள்ளிட்டவற்றை சுருளிமலைப்பகுதியில் கடந்த 16-ம் தேதி சேகரித்தனர். அவற்றை சேகரித்துக் கொண்டு ஆட்டோவில் வந்த 6 பேரை, கம்பம் கிழக்கு வனச்சரக பகுதியில் வனச்சரகர் சேகர், வனவர் பிரிக்ஸ் ஆகியோர் வழிமறித்து கீழே இறக்கியுள்ளனர்.

கீழே இறங்கிய ஆண்களின் வேட்டிகளை அவிழ்த்தும், பெண்களின் சேலைகளை உருவியும், அங்கிருந்த சிறுமியின் கால் சட்டையை கழற்றியும் வனக்காவலர்கள் அட்டூழியம் செய்துள்ளனர். மேலும், பழங்குடி மக்கள் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும் காவலர்கள் அபகரித்துள்ளனர்.

இதேபோல், வருசநாடு பகுதியில் வனசர்கர் கர்ணன் தலைமையிலான வனத்துறையினர் அப்பாவி பழங்குடி மக்களை ரத்தம் வரும் வரை தாக்கியுள்ளனர். பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையிலும் அடைத்துள்ளனர். இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கால் சிறையிலுள்ள பழங்குடியினத்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பழங்குடியினர் தாக்கப்பட்ட சம்பவங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். பழங்குடி பெண்களை பாலியல் வன்முறை மற்றும் அவமானப்படுத்திய சம்பவங்களில் ஈடுபட்ட வனச்சரகர் சேகர் மற்றும் வனவர் பிரிக்ஸ் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வன உரிமைச் சட்டம் 2006-ஐ உடனே அமல்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in