

சுதந்திரப் போராட்ட தியாகி களுக்கான ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை நேற்று காலை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. டெல்லி செங்கோட்டையில், தேசியக் கொடி பறப்பதற்கு 35 ஆண்டுகளுக்கு முன் நம் செங் கோட்டையில் தேசியக் கொடியை பறக்க வைத்தவர் தியாகி வாஞ்சிநாதன். இந்திய விடுதலைப் போராட்டத்தை மிகத் தீவிரமாக அடக்கிய நெல்லை ஆட்சியர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று, தன்னுயிரையும் மாய்த்து, உறங் கிய சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன்.
தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்து ராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவர், தியாகி விஸ்வநாத தாஸ், மருது சகோதரர்கள், தீரர் சத்தியமூர்த்தி, மார்ஷல் நேசமணி, வேலு நாச்சியார், அவரது படைத் தளபதி குயிலி, தில்லையாடி வள்ளியம்மை, காயிதே மில்லத் என தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையில் அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வைத் துறந்த தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். சுதந் திரம் என்பது, பேச்சு, எழுத்து, கருத்து, நம்மை நாமே ஆட்சி செய்யும் சுதந்திரம் என்பதுடன் நின்றுவிடுவதல்ல. உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில்தான் உள்ளது. அனை வரும் சமம் என்ற நிலையில்தான் உள்ளது.
ஓய்வூதியம் உயர்வு
சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த் தப்படுகிறது. அவர்கள் வாரிசு களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்து 500-லிருந்து 6 ஆயிரமாக உயர்த்தப்படும்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டுக்காக குறிப் பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியா கத்தை போற்றும் வகையில், அவர்கள் வாரிசுகளுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.