

மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை பாஜக சார்பில் போட்டியிட 200 பேர் வரை விருப்ப மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஓரிரு நாளில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலு க்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
அதிமுக கடந்த உள்ளாட்சித் தேர்தலைப் போல இந்த முறையும் தனித்துப் போட்டியிட முடிவு செய்து, மாவட்ட வாரியாக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. திமுகவிலும் விருப்ப மனு பெறப்படுகிறது. தேமுதிக, பாஜக தனித்துப் போட்டிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, திமுகவை தொடர்ந்து பாஜகவில் தற்போது விருப்ப மனு பெறப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் இதற்கு முன்பு 1972-ல் 2, 1979-ல் 3, 2002-ல் 2 பாஜக கவுன்சிலர்கள் இருந்து ள்ளனர். இந்த தேர்தலில் மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் செப். 23 முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. 3 நாள்களில் 200 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை மாநகர் பாஜக தலைவர் சசிராமன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கட்சியினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர். பெண்கள் அதிகளவில் மனு அளித்து வருகின்றனர். முஸ்லிம், கிறிஸ்தவர்களும் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். நேர்மையானவர்கள் கவுன்சிலர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர்.
மதுரை மாநகராட்சியில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் வாங்குகின்றனர். பாஜகவினர் லஞ்சம் வாங்காமல் மக்களுக்கு பணிபுரிவர்.
மாநகராட்சி நிர்வாகம் ஊழல் இல்லாமல் செம்மையாக நடை பெறும். ஒவ்வொரு திட்டங்களின் முழு மதிப்பீடும் முழுமையாக செலவிடப்படும் என்றார்.