

பறக்கும் ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் திட்டம் வரும் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் வரும் ஜூன் மாதம் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பறக்கும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணி மிகவும் மெதுவாக நடப்பதால், 11 ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் நீக்கப்படவுள்ளார் என்றும் புதிய ஒப்பந்ததாரர் அந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், பரங்கிமலை, ஓ.டி.ஏ. (ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்), சிட்கோ, அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சி.எம்.பி.டி. (சென்னை புறநகர் பேருந்து நிலையம்), கோயம்பேடு ஆகிய 11 பறக்கும் ரயில் நிலையங்கள் கட்டும் பணியை சி.சி.சி.எல்.கம்பெனி மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்டபடி பணிகளை இந்த கம்பெனி செய்யவில்லை. எனவே, அதற்கான விளக்கம் கேட்டு 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கண்ட 11 பறக்கும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களை அந்தக் கம்பெனி விலக்கிக் கொண்டுள்ளது. அங்கே கட்டுமானப் பணிக்கான இயந்திரங்கள் உள்ளிட்டவை திறந்தவெளியில் இருப்பதால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
மெட்ரோ ரயில் பணியில் இருந்து இந்த கம்பெனியை சட்டப்படி நீக்கிவிட்டு, புதிய ஒப்பந்ததாரருக்கு டெண்டர் கொடுத்து, அவர் பணியைத் தொடங்க 3 அல்லது 4 மாதங்கள் வரை ஆகிவிடும். இதன்காரணமாக, வரும் ஜூன் மாதம் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கும் திட்டம், 3 அல்லது 4 மாதங்கள் வரை தள்ளிப்போகும்.
11 பறக்கும் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளில், சி.எம்.பி.டி. ரயில் நிலையம் மட்டும் 98 சதவீதம் முடிந்துள்ளது. கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர் ஆகிய 4 ரயில் நிலைய கட்டுமானப் பணிகளில் 85 சதவீதம் முடிந்திருக்கிறது.
சிட்கோ, ஆலந்தூர் ரயில் நிலைய கட்டுமானப்பணி 75 சதவீதமும், சின்னமலை, கிண்டி, பரங்கிமலை, ஓ.டி.ஏ. ரயில் நிலைய கட்டுமானப் பணி 55 சதவீதமும் முடிவடைந்துள்ளது. இந்த ரயில் நிலைய கட்டுமானப்பணிகளில் மீதமுள்ள பணியை புதிய ஒப்பந்ததாரர் மேற்கொள்வார்.
இதுபோல விமான நிலையம் மற்றும் மீனம்பாக்கம் பறக்கும் ரயில் நிலைய கட்டுமானப் பணியை மிகவும் மெதுவாகச் செய்த லான்கோ கம்பெனியை நீக்கிவிட்டு, சில நாட்களுக்கு முன்பு யு.ஆர்.சி. என்ற கம்பெனிக்கு ரூ.82 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விட்டுள்ளோம்.
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் 25 சதவீத பணிகள் முடிந்துள்ளது. விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தைப் பொருத்தவரை, அதன் 75 சதவீத பணிகளை இந்திய விமான ஆணைய நிர்வாகம் செய்து வருகிறது.அங்குள்ள 25 சதவீத பணியையும், மீனம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணியில் மீதமுள்ள 75 சதவீத பணியையும் யு.ஆர்.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மெட்ரோ ரயிலை இயக்கும் திட்டம் 3 மாதம் தள்ளிப்போவதால், அதற்கிடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.