அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் கட்சிப் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழக ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சிப் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், எம்பிக்கள் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலையில் திரண்டனர். சட்டசபைக் கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4.38 மணிக்கு வந்தார்.

போயஸ் தோட்டத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை 5.08 மணிக்கு கட்சி தலைமை அலுவலகம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர் கள் சசிகலாவை வாழ்த்தி கோஷ மிட்டனர். கூட்டம் நடைபெறும் கட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சசிகலா சென்றார். அங்கிருந்து சசிகலா இரு விரல்களை அசைத்து கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் கூட்டம் சசிகலா கூட்டம் சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று சசிகலா அறிவுரை வழங்கினார்.

அதையடுத்து சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அருண் ஆதிலட்சுமி தம்பதியின் பெண் குழந்தைக்கு ஜெய என்றும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காட்டைச் சேர்ந்த அமலேஷ் பிரியா தம்பதியின் பெண் குழந்தைக்கு ஜெயசந்தியா என்றும் பெயர்சூட்டி ஆசி வழங்கினார். தஞ்சை மாவட்டம், 12-வது வட்டத்தைச் சேர்ந்த பி.சசிக்குமார் ராஜேஸ்வரி ஆகியோரது பெண் குழந்தை இளவரசியின் 3-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்குழந்தைக்கு ஆசி வழங்கினார்.

பின்னர் மாலை 5.55 மணிக்கு சசிகலா போயஸ் தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிமுக எம்பிக்கள் கூட்டம் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலங்களவை, மக்களவை அதிமுக எம்பிக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது நாடாளுமன்றத்தில் பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளதால், இக்கூட்டத் தொடரில் அதிமுக எம்பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சசிகலா ஆலோசனை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in