தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காய்கறிகள்: பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை - கர்நாடகாவுக்கு அனுப்ப முடியாததால் தமிழக அரசு ஏற்பாடு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காய்கறிகள்: பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை - கர்நாடகாவுக்கு அனுப்ப முடியாததால் தமிழக அரசு ஏற்பாடு
Updated on
1 min read

கர்நாடக பிரச்சினையால் தமிழக எல்லையோர விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுக்க, தருமபுரி, கிருஷ்ணகிரியில் சாகுபடியாகும் காய்கறிகளை கொள்முதல் செய்து, தமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் கடைகளில் விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் எல்லைப் பகுதி களில் இருந்து தமிழக பதிவெண் கொண்ட காய்கறி வாகனங்கள் கர்நாடகாவுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இது அரசின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காய்கறி சாகுபடி செய்வோர் எவ்வித சிரமமுமின்றி காய்கறிகளை விற்கவும், அவர்களுக்கு நியாய மான விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் உள்ள காய்கறி களை கூட்டுறவு அங்காடிகளின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடியாகும் காய்கறிகள், சென்னையில் உள்ள காமதேனு, சிந்தாமணி, காஞ்சிபுரம் மற்றும் வடசென்னை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 42 பண்ணை பசுமைக் கடைகளில் விற்கப்படும். திருச்சி மாநகரில் 8, மதுரையில் 4, கோவையில் 10 என தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 64 பண்ணை பசுமைக் கடைகள் மூலம் இந்த காய்கறிகள் விற்கப்படும். இதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவுத் துறை மூலம் 12 டன் காய்கறிகள் 13-ம் தேதி (நேற்று) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in