

நாயின் வாலை வெட்டிய 4 இளைஞர்கள், புளூ கிராஸ் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அய்யப்ப ன்தாங்கல்கஜலட்சுமி நகர் சிவன் கோயில் தெருவில் வசிப்பவர்கள் சோமு (29), அசோக் (23), ஹரி (19), பேச்சிமுத்து (26). இவர்கள் நான்கு பேரும் ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாயை அறைக்கு தூக்கிக் கொண்டு வந்து வளர்த்துள்ளனர்.
பப்பி என்று நாய்க்கு பெயர் வைத்த அவர்கள் சோறு வைக்கவில்லை. இதனால் நாய் மெலிந்தே காணப்பட்டது. சரியான உணவு இல்லாததால் நாய் சோர்வாகவே இருந்துள்ளது. இந்நிலையில் நாயின் வாலை வெட்டினால் நாய் சூட்டிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று யாரோ அவர்களிடம் கூற, செயலில் இறங்கி விட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேரும் வீட்டில் இருந்ததால் நாயின் வாலை வெட்டி விடுவது என்று முடிவெடுத்து, அரிவாள் மற்றும் ஒரு கட்டையை தயார் செய்தனர்.
வாலை வெட்டும்போது நாய் தப்பித்து செல்லாமல் இருக்க, ஒருவர் நாயின் கழுத்தை பிடிக்க இருவர் கால்களை பிடித்துக் கொண்டனர். மீதமிருந்த ஒருவர் நாயின் வாலை சிறிய கட்டையில் எடுத்து வைத்து வெட்டினார்.
வலி தாங்காத நாயின் கதறல் அந்த பகுதி மக்களை பதற வைத்துவிட்டது. வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்து, நாயின் வாலை 4 பேரும் சேர்ந்து வெட்டுவதை பார்த்து கொதிப்படைந்துவிட்டனர். சிலர் 4 இளைஞர்களையும் கண்டித்ததால் வாலை வெட்டுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இதனால் 95 சதவீத வால் வெட்டப்பட்ட நிலையில் அது தொங்கிக் கொண்டிருந்தது. வலி தாங்க முடியாத நாய் அந்த பகுதி முழுவதும் கதறிக் கொண்டே சுற்றி சுற்றி வந்தது.
இதைப் பார்த்து வேதனை அடைந்த அதே தெருவை சேர்ந்த மற்றொரு இளைஞர், வேளச்சேரி புளூ கிராஸ் அமைப்புக்கு போனில் தகவல் தெரிவிக்க, புளூ கிராஸ் பொது மேலாளர்ஜான்வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது நாய் வால் வெட்டப்பட்ட இடத்தில் கிடந்த ரத்தம், கட்டை மற்றும் ரத்தக் கறையுடன் இருந்த அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த பகுதியில் வேதனையுடன் சுற்றிக் கொண்டிருந்த நாயையும் பிடித்து சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தொங்கிக் கொண்டிருந்த நாயின் வால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
போரூர் காவல் நிலையத்தில் ஜான் வில்லியம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் இரக்கமற்ற செயலை செய்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். மிருகவதை தடுப்புச் சட்டம் 428ம் பிரிவின்கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து புளூ கிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் கூறும்போது, "இப்போது அந்த நாய் மனிதர்களை பார்த்தாலே பயப்படுகிறது.
இதனால் தனியாக வைத்து அதை பராமரித்து வருகிறோம். இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் மன நோயாளிகளுக்கு சமமானவர்கள்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.