

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வருகிற டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அக்டோபர் 9, 10 (புதன், வியாழன்) ஆகிய நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் நேர்காணல் 11-10-2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆகும். விண்ணப்பப் படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.500 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணத்தை தொடர்ந்து, அங்கு டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாததால், ஏற்காடு இடைத்தேர்தலையும் அக்கட்சி புறக்கணிக்கும் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.