ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வதில் ஆமைவேகம்: மோனோ ரயில் திட்டம் முடங்கும் அபாயம்

ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வதில் ஆமைவேகம்: மோனோ ரயில் திட்டம் முடங்கும் அபாயம்
Updated on
1 min read

சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோனோ ரயில் திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல், ஆரம்பகட்ட நிலையிலேயே இருக் கிறது. தமிழக அரசு முடிவு எடுக் காமல் காலம் தாழ்த்தி வருவதால், மோனோ ரயில் திட்டமே முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதற்குள் தேர்தல் வந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அடுத்து வந்த திமுக ஆட்சியால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னைக்குள் மெட்ரோ ரயிலும், புறநகரில் மோனோ ரயிலும் இயங்கினால், நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா விரும்பி அறிவித்த திட்டம் என்பதால் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

நகராத ‘மோனோ’

ஆனால், பல்வேறு காரணங்களால் மூன்றரை ஆண்டுகளாக மோனோ ரயில் திட்டம் டெண்டர் நிலையையே தாண்டாமல் தடுமாறி வருகிறது.

இதுவரை 2 முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. எனினும், கொஞ்சம்கூட நகராமல் நிற்கிறது மோனோ ரயில் திட்டம்.

மோனோ ரயில் 4 வழித் தடங்களில் விடப்படுவதாகத் தான் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச்சில் 3-வது முறையாக சர்வதேச டெண்டர் கோரப்பட்டபோது, வடபழனி-பூந்தமல்லி, கத்திபாரா-பூந்தமல்லி ஆகிய 2 தடங்களில் மட்டுமே இயக்கப்படவுள்ளது என்று தெரியவந்தது.

அந்த டெண்டர் நடவடிக்கை யின் முதல்கட்டமாக, அதில் பங்கேற்கும் நிறுவனத்தின் தகுதித் தன்மையை ஆராய்வதற்கான ‘ஆர்.எஃப்.க்யூ’ (ரெக்வெஸ்ட் பார் குவாலிபிகேஷன்) நடைமுறைக்கு, மும்பையை சேர்ந்த எஸ்ஸெல்- மலேசிய நிறுவனமான ஸ்கோமி, மற்றும் சீன ரயில் நிறுவனம்-ஐஎல்எப்எஸ் ஆகிய 2 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

காலம் தாழ்த்தும் அரசு

ஆனால், அவற்றின் மீது இறுதி முடிவு எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இப்படி காலம் தாழ்த்துவதால் மோனோ ரயில் திட்டமே முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மோனோ ரயில் திட்டத்துக்காக 3-வது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இது இன்னும் முதல் கட்டத்தையே தாண்டவில்லை. புதிதாகக் கோரப்பட்ட டெண்டரின் அடுத்த கட்டத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் நிதி திரட்டுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படும்.

மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் அறிவிக்கை வெளியாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in