

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென தமாகா தலைவர் ஜிகே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் குழந்தை தொழிலாளர்கள் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வறுமை, அறியாமை, பெற்றோரால் கைவிடப்பட்ட நிலை, பொருளாதார சூழல், பெற்றோரை இழத்தல், இடைத்தரகர்கள் போன்றவை தான் இதற்கு மூலகாரணம்.
எத்தகைய சூழலிலும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக கல்வி கற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும். எனவே தன்னார்வலர்களும், மத்திய, மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.