

அரசு போக்குவரத்துக் கழகங் களின் நஷ்டத்தைக் குறைக்கும் நட வடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் பஸ்களின் சேவை, வரும் 10-ம் தேதி முதல் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 23 ஆயிரத்து 400 பஸ்கள் இயக்கப் படுகின்றன. அடிக்கடி டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகளால் இத்துறை தொடர்ந்து நலி வடைந்து வருகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு போதிய நிதியை ஒதுக்கு வதில்லை. இதனால், பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி இயக்கப் படுகின்றன. ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு பணிக்கொடை, விடுப்புத் தொகை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. தற்போது மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
எனவே, கூடுதல் செலவைக் குறைக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்த, வருவாய் இல்லாத வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 2 ஆயிரம் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு போக்கு வரத்துக் கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க நிர்வாக ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மிகக் குறைவான பயணிகளே பயணம் செய்யும் பஸ்கள், நஷ்டத்துடன் இயக்கப்படும் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடந்த ஜனவரி இறுதிமுதல் இந்த நடைமுறை அமலில் இருந்தது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், கடந்த 2 நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிகளவில் வருகின்றனர். எனவே, வரும் 10-ம் தேதி முதல் தேவையின் அடிப்படையில் படிப்படியாக பஸ் சேவையை அதிகரிக்க போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்’’என்றனர்.