சென்னையில் அடுத்த 6 மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம்: ஆய்வறிக்கையில் தகவல்

சென்னையில் அடுத்த 6 மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம்: ஆய்வறிக்கையில் தகவல்
Updated on
1 min read

சென்னையில் அடுத்த 6 மாதத்தில் ரியஸ் எஸ்டேட் தொழில் முன்னேற்றம் அடையும் என்று ‘நைட் பிராங்க்’ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் சென்னை கிளை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

குடியிருப்புகள், அலுவலக கட்டுமானத்துக்கான ஆய்வறிக் கைகளை எங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புகள் கட்டுவதை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 36 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குடியிருப்புகள் விற்பனையில் மாற்றம் இல்லை. ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழிலின் போக்கையும் தாண்டி அண்ணாநகர், கோபாலபுரம், உத்தண்டி ஆகிய இடங்களில் பெரிய அளவிலான குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்சென்னையில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயிலை விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், வடசென்னையில் புதிய குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் கட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடியிருப்புகளின் தொடர் தேவை, விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை குறைவு ஆகியன ரியஸ் எஸ்டேட் தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தி உள்ளது.

குத்தகைக்கு இடம் எடுக்கும் முடிவை ஐ.டி. நிறுவனங்கள் தள்ளிவைத்துள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த நிலை நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அலுவலகங்களுக்கான கட்டிட கட்டுமானத்தில் உடனடியாக பெரிய மாற்றம் நிகழப் போவதில்லை.

தற்போது சென்னையில் நடைபெறும் சிறிய குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் பணிகள் மேற்கு மற்றும் தென் சென்னை பகுதிகளில்தான் நடந்து வருகின்றன. மேற்குப் பகுதியில் உள்ள கொளப்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரங்கிமலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வளசரவாக்கம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் இருப்பதாலும், குறைந்த விலையில் குடியிருப்புகள் கிடைப்பதாலும் அங்கே புதிய குடியிருப்புகள் கட்டும் பணி அதிகரித்துள்ளது.

இவ்வாறு காஞ்சனா கிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in