Published : 25 Oct 2013 03:03 PM
Last Updated : 25 Oct 2013 03:03 PM

இலங்கைத் தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை கொச்சைப்படுத்திய இலங்கைத் தூதரை அழைத்து, இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா.வின் குழுவில் போர்க் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்த, ராஜபக்‌ஷே அரசுக்கு ஒரு கறை அழிப்பு வாய்ப்பாகத்தான் காமன்வெல்த் அதிபர்கள் மாநாடு அமைந்துள்ளது. எனவே அதில் இந்தியா கலந்து கொண்டால், உலகத்தார் கண்முன் இந்தியாவே கலந்து கொண்டது பாரீர் என்று தம்பட்டம் அடித்து, போர்க் குற்ற விசாரணை - தண்டனை மனித உரிமை மீறல்கள் - இவைகளைப் புறந்தள்ளி இரண்டு ஆண்டு காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக அதிபர் ராஜபக்‌ஷே நீடிப்பதால், அவர்மீது நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்காது.

இத்தகைய காரணங்களால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், பொது மக்கள் உட்பட எல்லோரும் ஏகோபித்த முறையில் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இந்த உணர்வினை, ஜனநாயக நாட்டில், மத்திய அரசு மதிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி 24.10.2013 (நேற்று) தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து முன்மொழிந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் வழிமொழியப்பட்டு ஒரு மனதாக இந்தத் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய முக்கிய கடமை, மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு உண்டு.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் கட்சிகள், அமைப்புகளிடையே அரசியல் ரீதியாக இருப்பினும் இதில் ஒன்றுபட்டு 8 கோடி தமிழர்கள் மட்டுமல்ல எஞ்சிய 2 கோடி உலகத் தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிபலித்துள்ளதே ஒருமனதாக இத்தீர்மானம் பற்றி இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் கரியவாசம் (இவர் சென்னையில் கான்சலாக இருந்து பல வேலைகளை நடத்தியதின் காரணமாக, இவர் இப்பதவிக்கு உயர்த்தப்பட்ட விபீஷணத் தமிழர்) என்பவர் இதுபற்றி தேவையின்றி அதிகப் பிரசங்கித்தனமாக - சட்டமன்றத் தீர்மானத்தைக் குறைகூறி அப்படி புறக்கணித்தால் இந்தியா, தனிமைப்படுத்தப்படும்; இதனால் யாருக்கு நட்டம் என்றெல்லாம் 'வாய் நீளம்' காட்டியிருக்கிறார்.

இவர் ராஜபக்‌ஷே அரசின் ஒரு சிப்பந்தி - அதிகாரி அவ்வளவுதான். இவர் இலங்கை அதிபரோ, இலங்கையின் இவர் இப்படி பேசுவது அரசியல் நாகரிகமும் அல்ல; பண்பாடும் அல்ல. அதைவிட தமிழக சட்டமன்றத் தீர்மானம் பற்றி இன்னொரு நாட்டைச் சேர்ந்த இவர், கேலி செய்வது சட்டமன்ற அவமதிப்பு - இதைத் தமிழக சட்டமன்றம் ஒரு உரிமைப் பிரச்சினையாக எடுத்து, நோட்டீஸ் அனுப்பி, அவரை சட்டசபைக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, விசாரிக்க முடிவு செய்ய வேண்டும். தவறு செய்யும் நாடுகளுக்காக, அந்த நாட்டு தூதுவர்களை வெளியுறவுத் துறை அழைத்து கண்டித்து எச்சரித்து அனுப்புவதும், உச்ச கட்டமாக தூதுவர் காரியாலயங்களை மூடுவதும் உலகெங்கும் நடைபெறுவதுதானே!

நம் நாட்டில் அண்மையில் பாகிஸ்தான் தூதுவரை அழைத்து, எச்சரித்து அனுப்பவில்லையா? அதுபோல தமிழக சட்டமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அந்தத் தூதுவரை அழைத்து விசாரிக்க வேண்டும்.

எனவே, இந்த ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வினை மத்திய அரசும், பிரதமரும் சரியான எச்சரிக்கை மணியாகவும், அழிக்கப்பட முடியாத வரலாற்றுச் சுவரெழுத்துகளாகவும் பார்த்து, கால தாமதம் செய்யாமல் சரியான முடிவு எடுக்க வேண்டும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x