Published : 27 Nov 2014 10:50 AM
Last Updated : 27 Nov 2014 10:50 AM

பன்னீர்செல்வம் ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் மலிந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

கோவையை அடுத்துள்ள கோவில்பாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் பாஜக-வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. 18002662020 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணைந்துக் கொள்ளும் திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கானோர் தங்களை பாஜக-வில் இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாஜக-வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மலிந்துவிட்டது.

வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் குறித்து துதி பாடாமல், மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்திலான அவிநாசி-அத்திக்கடவு, பாண்டியாறு-புன்னம்புழா உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆழ்கடல் மீன் பிடிப்புத் திட்டத்தை பெற்றுத் தர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x