

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் டிஆர்பி மூலம் நிரந்தர முது கலை பட்டதாரி ஆசிரியர்கள் நிய மிக்கப்படும் வரை தற்காலிகமாக 2,536 முதுகலை ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச் சந்திரன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:
தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,536 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகே உள்ள பகுதிகளில் உள்ள தகுதியான நபர்களைக் கொண்டு ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு மூலம் இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.