

ஐரோப்பிய நாடுகளின் பின்பற்றப்படும் கொள்கைகளின் அடிப்படையில்தான், தமிழகத்தில் 'சமூக ஜனநாயகக் கூட்டணி'யை ராமதாஸ் அமைத்ததாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தீர்மானம் கூறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாமக தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அவர் அறிவித்தார்.
இந்தச் சூழலில் பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பாமக தலைமைப் பொதுக் குழுவின் அரசியல் தீர்மானம் வருமாறு:
சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகிய உன்னதமானக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூக ஜனநாயகம் ஆகும்.
பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட 51 மேற்கு ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் சமூக ஜனநாயகக் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன.
ஐரோப்பிய நாடுகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூக ஜனநாயக கொள்கைகளை பின்பற்றி தான் அரசாங்கத்தை நடத்துகின்றன.
இத்தகைய சிறப்பான கொள்கைகளின் அடிப்படையில்தான், மருத்துவர் ராமதாஸ், கடந்த 21.10.2013 அன்று தமிழ்நாட்டில் சமூக ஜனநாயக கூட்டணியை அமைத்து, மக்களவைத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர்களை அறிவித்தார். அவரின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடுவது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக் குழு உறுதியேற்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.