Published : 21 Jun 2016 02:46 PM
Last Updated : 21 Jun 2016 02:46 PM

பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி: அரசுக்கு ஸ்டாலின் ஆலோசனை

அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முறையான யோகா பயிற்சிக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ''சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ந் தேதியை ஐ.நா. அவை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இரண்டாவது ஆண்டாக இன்றைய நாளில், யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகப் பயிற்சிகள் மதம்-மொழி-இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பொதுவானதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் பன்னெடுங்காலமாக அந்தந்த மண்ணின் சூழலுக்கேற்ப யோகப் பயிற்சிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக நான் யோகா பயிற்சிகள் செய்து வருகிறேன். இதன் காரணமாக மனஅழுத்தங்கள் குறைந்து, மக்கள் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடமுடிகிறது. உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் இளந்தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

இன்றைய இளந்தலைமுறையினருக்கு கல்விச்சுமை உள்பட பலவிதமான அழுத்தங்கள் இருப்பதால் விரக்தி மனப்பான்மைக்குள்ளாகிறார்கள். இத்தகையப் போக்குகளைத் தவிர்க்கும் விதத்தில், அனைத்துப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முறையான யோகா பயிற்சிக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். எளிய பயிற்சிகளின் மூலமாக இளந்தலைமுறையினர் வலிமையான உடலும் மனமும் கொண்டவர்களாக உருவாக்கப்பட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x