

மன்னார்குடியில் மதுவால் உயிரிழந்த குழந்தைகளின் தந்தைக்கு குழந்தைகளும், குடும்பத்தினரும் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்து உள்ள மேலநாகையைச் சேர்ந்தவர் சசி(எ)சாமிநாதன்(39). கார் ஓட்டுநரான இவர், மதுப் பழக்கத்தால் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு தவமணி என்ற மனைவி, பாலகஸ்தூரி(10), பிரீத்தி(8) என்ற குழந்தைகள் உள்ளனர்.
சாமிநாதன் இறந்து ஓர் ஆண்டு நிறைவடைந் ததையொட்டி, அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் (மே 8) அப்பகுதியில் நினைவஞ்சலி பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த பேனரில், ‘மது இல்லை என்றால் மன்னாதி மன்னன் எங்கள் தந்தை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதியி னரும், அந்த வழியாக செல்பவர்களும், இந்த பேனரில் உள்ள வாசகங்களை படித்து கண் கலங்கியபடி சென்றனர்.
இதுகுறித்து சாமிநாதனின் மனைவி தவமணி கூறியதாவது: எனது கணவர் இப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலருக்கு கார் ஓட்டுநராக இருந்துள்ளார். அவர், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால், வேலையை இழந்தார். தொடர்ந்து, கஷ்டப்பட்டு வாங்கிய காரையும், பறிகொடுத்துவிட்டார்.
அவரை குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தோம். அங்கு சென்றும் அவர் தொடர்ந்து மது குடித்ததால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். பின்னர் ஒரு வாரம் போராடி அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவந்தோம்.
இதனால், தந்தை மீது உயிரையே வைத் திருந்த எனது குழந்தைகளின் எதிர்கால கனவுகள் அனைத்தும் தகர்ந்தன. எனது குழந்தை களுக்கு ஏற்பட்ட நிலை, எவருக்கும் வரக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பேனரை வைத்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து கவிஞர் மன்னார்குடி அப்துல் அசாப்தீன் கூறியபோது, “குழந்தைகளின் உண்மையான ஹீரோ அவர்களது தந்தைதான். இதுபோல, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு தீவிரமாக செயல்படுவது வருத்தமாக உள்ளது” என்றார்.