5 மீனவர்களை மீட்க சட்ட நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

5 மீனவர்களை மீட்க சட்ட நடவடிக்கை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
Updated on
1 min read

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் வழித்தடங்களை ஹெலிகாப்டர் மற்றும் ஹோவர்கிராப்ட் கப்பலிலும் மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்த பின்னர் செவ்வாய்கிழமை மண்டபத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது வேதனைக்குரியது. மீனவர்களையும் மீட்க வெளியுறத்துறை மூலம் கொழும்பில் உள்ள இந்திய தூதர் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றத்தில் இருந்து மீனவர்கள் சிறைப்பிடிப்பதும் விசைப்படகுகளை கைப்பற்றுவதும் அதிகமாகியுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியும், சுஷ்மா ஸ்வராஜும் இலங்கை அதிபரிடம் பேசி வருகிறனர்" என்று தெரிவித்தார்.

தவித்த மீனவ குடும்பத்தினர்

முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்ரியை சந்திக்க, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மண்டபம் கடற்படை முகாமிற்கு வருகை தந்தனர். ஆனால் கடற்படை வாயில் காவலர்கள், மீனவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் மழையில் நனைந்தவாறு செய்வதறியாது மீனவர்கள் நின்று கொண்டிருந்தனர். பின்னர் தகவல் அறிந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீனவர்களை அமைச்சரிடம் அழைத்துச் சென்றார்.

ஐந்து மீனவர்களும் தனி சிறைக்கு மாற்றம்

இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த், லாங்லெட் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் கிறிஸ்துராஜா சீல்தன், ஞானப்பிரகாசம், துஷாந்தன் கமல கிறிஸ்ரியன் ஆகிய 8 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 மீனவர்களும், கொழும்பு வெலிக்கடை சிறையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மாற்றப்பட்டனர். இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய தூதர் சந்திப்பு?

இதற்கிடையில், இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகியோரை இலங்கைக்கான இந்திய தூதர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in