

சவுதி அரேபியாவிலும் 22 தமிழக மீனவர்கள் மீது நீதிமன்ற விசாரணை
இரு நாட்டு உறவுகள் குறித்த உடன்படிக்கைகளால், இலங்கையில் தூக்குத் தண்டனை பெற்ற ஐந்து மீனவர்கள் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள 22 தமிழக மீனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றும் நடவடிக்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு ராமேசு வரம் தங்கச்சி மடத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள், இலங்கை கடற் படையால் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டது.
அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு மனுவும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வழக்கு செலவுக்காக 20 லட்ச ரூபாய் தமிழக அரசிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு உயரதிகாரிகளிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:
தற்போது, கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தூதரகம் மூலம், தண்டனை ரத்து மற்றும் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கைதிகளை இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து, இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்திய, இலங்கை இரு நாட்டு உறவுகள் குறித்த உடன்படிக்கைகளில், இரு நாடுகளிலும் உள்ள சாதாரண தண்டனைக் கைதிகளை மட்டும், அவரவர் நாட்டு சிறைகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, இரு நாடுகளும் அவரவர் நாட்டுக் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆனால், இந்தப் பிரச்சினையில், ஐந்து மீனவர்களும் தூக்குத் தண்டனை கைதிகளாவர். தூக்குத் தண்டனை போன்ற உச்ச பட்ச தண்டனைக் கைதிகளை மாற்றிக் கொள்ள உடன்படிக்கைகள் எதுவும் இதுவரை கையெழுத் தாகவில்லை. எனவே, ராமேசுவரம் மீனவர்களை தற்போதைய நிலை யில் இந்திய சிறைக்கு மாற்ற முடியாது.
மேல்முறையீடு மனுவில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டால் மட்டுமே அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற முடியும். கடந்த 1976-ம் ஆண்டுக்குப் பின், இலங்கையில் எந்த வித தூக்குத் தண்டனையும் நிறைவேற் றாததால், மேல்முறையீடு அல்லது அதிபரின் கருணைக் கடிதம் மூலம் ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் பிறகே, இந்திய சிறைக்கு அவர்களை மாற்ற முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் 22 பேர்
இதேபோல், கடந்த 2013ல் நாகை மீனவர்கள் 12 பேர், காரைக்காலில் இருந்து ஆறு பேர், விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேர், கடலூரைச் சேர்ந்த ஒருவர் என, மொத்தம் 22 மீனவர்கள், தனியார் ஏஜெண்ட் மூலம், சவுதி அரேபியாவுக்கு மீன் பிடி தொழிலுக்குச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளில்லாமலும், ஏஜென்ட் கூறியது போல் ஊதியம் கிடைக்காமலும் கொடுமைப் படுத்தப்படுவதாக, அவர்களது உறவினர்கள் தமிழக அரசுக்கு மனு அளித்தனர். அவர்களை மீட்க பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
ஆனால், இதிலும் மீனவர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 22 மீனவர்களும் முறையாக சவுதி அரேபிய மீன் பிடி நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணிக்கு சேர்ந்துள்ளனர். எனவே, அவர்களது விவகாரம் சவுதி அரேபியாவில் தொழிலாளர் துறை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பதால், இரு நாட்டு உடன்படிக்கைகளின் படி, 22 தமிழக மீனவர்களை மீட்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.