Published : 14 Oct 2013 11:56 AM
Last Updated : 14 Oct 2013 11:56 AM

அக். 23-ல் கூடுகிறது தமிழக சட்டமன்றம்

தமிழக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் மணல் கொள்ளை விவகாரம் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 21-ம் தேதி தொடங்கி, மே 16-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 40 நாட்களுக்கு மேல் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர், அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.



இந்நிலையில், சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், அக்.23-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ளதாக, சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள்

இந்தத் தொடர் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது. அக்டோபர் 23-ம் தேதி நடக்கும் முதல் நாள் கூட்டத் தொடரின் முடிவில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, அவையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அனைத்து எதிர்க்கட்சிகளும் முக்கிய பிரச்சினைகளை எழுப்பி, மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய பிரச்னையும் இந்தக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும்.

மணல் கொள்ளை

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாது மணல் கொள்ளை, மணல் திருட்டு, சில இடங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும். அதற்கு பதிலடி கொடுக்க ஆளும்கட்சியும் வேகம் காட்டும்.

மக்களவை தேர்தலில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கூட்டணியை மனதில் வைத்தே சட்டமன்றக் கூட்டத்தொடரில் கட்சிகளின் செயல்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள், எப்படி செயல்படுகின்றன என்பதைக் கொண்டே அவர்கள் எதிர்வரும் தேர்தலில் எந்த அணியில் சேருவார்கள் என்பதை ஓரளவு கணிக்கவும் முடியும்.



கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் மத்தியில் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கருணாநிதி, மு.க. ஸ்டாலினை தவிர மற்ற திமுக உறுப்பினர்கள் அனைவரும், அந்தக் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 தேமுதிக எம்எல்ஏ-க்கள் பங்கேற்க முடியுமா?

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, சக உறுப்பினரை தாக்கியதாக கூறி தே.மு.தி.க.வை சேர்ந்த வி.சி.சந்திரகுமார், கே.நல்லதம்பி, டி.முருகேசன், எஸ்.செந்தில்குமார், அருள்செல்வன், பி.பார்த்தசாரதி ஆகிய 6 உறுப்பினர்களை ஓராண்டு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். பின்னர், அந்த தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது.

அவர்களது தண்டனைக் காலம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், தண்டனைக் காலம் முடிந்தது குறித்தோ, அடுத்த தொடரில் கலந்து கொள்வது பற்றியோ தங்களுக்கு இதுவரை எந்த தகவலும் அனுப்பப்படவில்லை என்று தேமுதிக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது தண்டனைக் காலம் முடிந்தது பற்றி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாக சட்டப்பேரவைச் செயலக வட்டாரத்தினர் கூறுகின்றனர். எனவே, அந்த 6 தேமுதிக உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x