

கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரை உடைத்து, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநிலத்தில் இரண் டாம் இடம் பிடித்து ராமநாதபுரம் மாவட்டம் சாதனை படைத்திருப்பது கல்வியாளர்களை பெரும் ஆச்சர்யத்துக்கு ஆளாக்கியுள் ளது.
தண்ணீர் இல்லா காடு, கல்வியில் பின்தங்கிய மாவட்டம் எனப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சியில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2013-ல் மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்ற க.நந்தகுமார், மாவட் டத்தில் கல்வித்துறை மற்றும் மருத் துவத்துறை ஆகிய 2 துறைகளில் மிகுந்த கவனம் செலுத்தினார்.
முதலில் கல்வித்துறையில் மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டார். பிளஸ் 2, 10-ம் வகுப்பு மாணவர்களை மாநில அளவில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர், பொறியாளர்களாக நல்ல கல்லூரி களில் படிக்கும் வகையில் சாதனை படைக்க ‘எலைட்’ என்ற பிரிவை தொடங்கினார். அவர் முதலில் பாடவாரியாக ஆசிரியர்களுக்கு சிறந்த கல்வியாளர்களை வைத்து பயிற்சி அளித்தார். அதன்பின்பு ஆட்சியரின் நிதியில் இருந்து மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கினார்.
அவ்வப்போது தேர்வுகள் நடத்தியும், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் 2015-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட் டம் பிளஸ் 2 அரசு தேர்வில் 17-ம் இடத்தை பிடித்தது. அதே நடை முறையை பின்தொடர்ந்ததால், சென்ற ஆண்டு 9-ம் இடத்தை பெற்றது. நல்ல மாற்றத்தைக் கண்ட கல்வித்துறையினர் ஆட்சியர் நந்தகுமார் இடம் மாறிய நிலையில், அவர் வகுத்துக்கொடுத்த திட்டப்படி செயல்பட்டனர். இதற்கு கை மேல் பலன் கிடைக்க, நேற்று வெளியான தேர்வு முடிவில் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது ராமநாதபுரம் மாவட்டம்.
இந்த சாதனையை எட்டியது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ஜெயக்கண்ணு கூறியதாவது: முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் எடுத்த நடவடிக்கை களை தொடர்ந்து பின்பற்றி வந்ததால் 2-ம் இடம் பிடித்துள் ளோம். மாணவர்களுக்கு பாட வாரியாக தினமும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தினோம்.
நடத்திய பாடத்தில் அடுத்த நாள் காலை 50 மதிப்பெண்களுக்கு தேர்வு வைப்போம். அதை அன்றே அந்த ஆசிரியர் திருத்தி, மாணவர் களிடம் வழங்க வேண்டும். விடைத்தாளை மாணவர்கள் பெற் றோரிடம் காண்பித்து கையெழுத் துப் பெற்று வர வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் வாராவாரம் கூட்டம் நடத்தி, மாணவர்கள் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வந்துள்ள னரா, ஆசிரியர் கையொப்பம் இட்டுள்ளாரா என ஆய்வு செய்வார்.
அதன் பின்பு, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு நடைபெறும். பின்னர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், 2 பருவத் தேர்வுகள் நடத்திய பின், அதன் முடிவுகளை வைத்து மாவட்ட ஆட்சியர், தலைமை ஆசிரியர்களை அழைத்து ஆய்வு செய்வார். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வினா வங்கி வழங்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தற்போதைய மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். ஆசிரியர்களும் திறம்பட செயல்பட்டு மாநில அளவில் 2-ம் இடம் பிடிக்க உதவினர். ராமநாதபுரம் மாவட்டத்தை கல்வியில் முன்னிலைக்கு கொண்டுவர இதுவே காரணமாகும் என்றார்.
மாநில அளவில் 2-ம் இடம் பிடித்ததால் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர், கல்வித்துறையினர், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தண்ணியில்லா காடு என்றும், தண்டனைக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் இடமாக அறியப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பல்வேறு பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ள மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி, மாநில அளவில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
29 முறை விருதுநகர் முதலிடம்
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீத மாநில தரவரிசைப் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் முதலிடம் பெற்றுள்ளதன் மூலம் 29-வது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.