Published : 29 Jun 2017 12:30 PM
Last Updated : 29 Jun 2017 12:30 PM

சென்னை கோயம்பேட்டில் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) புதிய மின் திட்டங்கள் பற்றி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அப்போது, சென்னை மாநகரிலுள்ள கோயம்பேட்டில் 1,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர்:

"தடையற்ற மின்சாரம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

அனைவரும் தரமான மின்சாரம் பெறும் வகையில், துணை மின் நிலையங்கள், மின்பாதைகள், மின் மாற்றிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2008-ஆம் ஆண்டு அமலில் இருந்த மின்கட்டுப்பாட்டு முறைகள் 5.6.2015 முதல் முழுவதுமாக நீக்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும்,

தற்போது நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி 100 யூனிட் வரையிலான மின்சாரம் கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் பற்றி இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. நாகை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.

2. சென்னை மாநகரிலுள்ள கோயம்பேட்டில் 1,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.

3. தற்போது 230 கிலோ வோல்ட்டாக இருக்கின்ற தரமணி துணை மின் நிலையம் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 கிலோ வோல்ட் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும் .

4. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில், நரிப்பையூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களை உள்ளடக்கி 500 மெகாவாட் மிக உய்ய சூரியசக்தி மின்னழுத்த பூங்கா 2,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பொறியியல்- கொள்முதல்-கட்டுமானம் அடிப்படையில் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.

5. சென்னை பெருநகரின் மின்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, கூடுதலாக 31 புதிய துணை மின் நிலையங்கள், இயக்கத்தில் உள்ள 314 உயரழுத்த மின்மாற்றிகளை திறன் உயர்த்தும் பணிகள், புதிய 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகள் நிறுவும் பணிகள் மற்றும் இயக்கத்தில் உள்ள 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகளை வலுப்படுத்தும் பணிகள் ஆகியன 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் நான்கு, 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் நாற்பத்திநான்கு, 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 80 ஆக மொத்தம் 128 துணை மின் நிலையங்கள் 1,347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, எரிசக்தி திறன் சேவை லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு 11,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் மாநிலத்தில் பயனுள்ள ஆற்றல் செய்திறன் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உயர்த்திடவும் மற்றும் புதைபடிவ எரிபொருள் நுகர்வினை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x