

மதுரை நெல்பேட்டை யானைக்கல் சந்திப்பில் உள்ள சுற்றுச்சுவரை 'வா நண்பா' அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சுத்தப்படுத்தி வர்ணம் பூசினர்.
மதுரையை தூய்மையான நகராக மாற்றவும், தூய்மையான நகரங்கள் தர வரிசைப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரையை இடம்பெற வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களிலும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து நகரை அழகாக்க வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை 'வா நண்பா' இளைஞர் குழுவினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடியிருப்புகள், சாலைகளில் மரக்கன்றுகள் நடுவது, குப்பைகளை அள்ளி நகரை அழகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்பேட்டை-யானைக்கல் சந்திப்பில் உள்ள சுற்றுச்சுவரில் அந்த வழியாக செல்வோர் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி வந்தனர். இந்நிலையில், வா நண்பா இளைஞர்கள் அப்பகுதி மக்கள், மாநகராட்சியுடன் இணைந்து நேற்று நெல்பேட்டை-யானைக்கல் பகுதி சுற்றுச் சுவரில் கண்ணைக் கவரும் அழகிய வர்ணங்களை பூசி ஓவியங்களை வரைந்தனர்.
அதனால், தற்போது அப்பகுதி சுகாதாரமாகவும், அழகாகவும் மாறிவிட்டது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு, 'வா நண்பா' குழுவினரைப் பாராட்டி பேசுகையில், இதேபோல மக்களும், தொண்டு நிறுவனத்தினரும், பொதுநல அமைப்பினரும், அவரவர் பகுதியை தூய்மைப்படுத்த முன்வந்தால் மாநகர் தூய்மையான நகராக விளங்கும் என்றார்.