

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் கோடிக்கணக்கில் மின்கட்டணம் பாக்கி வைப்பதை தடுக்கும் வகையில், ப்ரீபெய்டு மின்மீட்டர் முறையை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 92 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டு 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள், அரசு அலுவலகங்களுக்காக புதிய திட்டத்தை மின்வாரியம் அமல்படுத்த உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பல அரசு அலுவலகங்கள் மின்கட்டணத்தை முறையாக செலுத்துவதில்லை. சென்னை குடிநீர் வாரியம் கடந்த ஆண்டில் 6 மாதகாலத்துக்கு கட்டணம் செலுத்தவில்லை. சில மாநகராட்சிகள் ரூ.608 கோடி வரை கட்டண பாக்கி வைத்துள்ளன. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ரூ.600 கோடி வரை கட்டண நிலுவை வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. இதை முறைப்படுத்தவே புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, மின்கட்டணத்தை பிரீபெய்டு முறையில் முன்னரே செலுத்த வேண்டும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நுகர்வோர் அல்லது அலுவலகங்களுக்கு பிரீபெய்டு மீட்டரை மின்வாரியம் வழங்கும். மின்சாரத் தேவைக்கேற்ற தொகையை அவர்கள் ‘ரீசார்ஜ்’ செய்ய வேண்டும். ரீசார்ஜ் தொகைக்கான பயன்பாடு முடிந்ததும், மீட்டரில் இருந்து சப்தம் வரும். மீண்டும் ரீசார்ஜ் செய்தால், தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படும். ஆந்திரா, தெலங்கானாவில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதவிர, மின்சார மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதுபற்றி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறியபோது, ‘‘வாடகைக்கு குடியிருப்பவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்தினால், அவருக்கான மானியம், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேரும். இது குழப்பம், சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற திட்டம் வர வாய்ப்பு இல்லை’’ என்றனர்.