

அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்வோர் இனி சுத்தமான குடிநீர் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அரசு பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் குறைந்த விலையில் ரூ.10–க்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டர் (அம்மா குடிநீர்) விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.10.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தையும், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போது அம்மா குடிநீர் பாட்டில்களை 7 பயணிகளுக்கு அவர் வழங்கினார்.
அதிகரித்து வரும் விலைவாசியை கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், குறைந்த விலையில் உணவு வகைகளை விற்கும் அம்மா உணவகங்கள், பசுமை காய்கறிக் கடைகள் ஆகியவற்றை, சென்னையில் தமிழக அரசு திறந்தது. இவற்றுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, குறைந்த விலை குடிநீர் பாட்டில் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது பற்றிய அறிவிப்பினை ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார்.
இந்த குடிநீர் உற்பத்தி நிலையம், 2.47 ஏக்கர் பரப்பில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம், கும்மிடிப்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும். இதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பணிகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கவனிக்கும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு லிட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் விற்கப்படும்.
“ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்யும் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.15, தனியார் நிறுவனங்கள் ரூ.20-க்கு ஒரு லிட்டர் பாட்டிலை விற்பனை செய்கின்றன. ஆனால் அம்மா குடிநீர் ரூ.10-க்கு கிடைப்பதால் பயணிகள் குறைந்த செலவில் தரமான தண்ணீரை குடிக்க முடியும்,” என்று போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த குடிநீர் விற்பனைத் திட்டம், மாநிலத்தின் மற்ற போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மேலும் 9 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 30 ஊழியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை `ரயில் நீர்’ குடிநீர் விற்பனையை மேற்கொண்டு வரும் ரயில்வே நிர்வாகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
குடிநீர் விற்பனையை முதல்வர் தொடங்கிவைத்ததுமே, சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட 43 இடங்களில் குடிநீர் விற்பனை தொடங்கி அமோகமாக விற்பனையானது.
மறுசுழற்சி செய்ய முடியுமா?
பிளாஸ்டிக் பொருள்கள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், அதன் உபயோகத்தை குறைக்கும்படி பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசு நிறுவனமே பிளாஸ்டிக் உபயோகிப்பதை ஊக்கப்படுத்துவது போல் இந்த குறைந்த விலை குடிநீர் விற்பனைத் திட்டம் அமைந்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த பாட்டில்களை பொதுமக்களிடமிருந்து அரசே ஒரு விலையை நிர்ணயித்து, வாங்கிக் கொண்டால், அவற்றை முறைப்படி அழிக்கவோ அல்லது மறுசுழற்சி செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாக அமையும்.