

தமிழகத்தில் டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங் களில் கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழக லாரி உரிமை யாளர்கள் நேற்று முன்தினம் முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 4.25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் கோடி மதிப்பி லான பொருட்கள் தேக்கமடைந்துள் ளன. லாரி வாடகை, டீசல், கூலி என தொழில்ரீதியாக 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவருவதில் இழுபறி நிலை நீடிப்பதால், போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
தென்னக மோட்டார் வாகன கூட்டமைப்பின் தலைவர் கோபால் நாயுடு, பொதுச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா, லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாரசாமி ஆகியோர் தலைமையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) சேலத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வித மாக மாவட்ட தலைமையிடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட டேங்கர் லாரிகளின் ஆதரவை கோருவது எனவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு அளித்தால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடும். லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் வரை, லாரிகளில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த அவகாசம் கோரினோம். ஆனால், அதற்குக்கூட ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இதனால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையி லும், வியாபாரிகளின் தொழில் பாதிப்புக்கு உள்ளாகாத வகை யிலும் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்றார்.