Published : 02 Jun 2016 12:04 PM
Last Updated : 02 Jun 2016 12:04 PM

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சி மொழிகளாக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தின் இணையதளம் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலக இணையதளம் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழி இணையதளங்களை தொடங்கி வைத்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ''மக்களை அவர்களின் மொழியிலேயே சென்றடைய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகவும், அவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநில மொழி இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன'' என்றும் கூறியிருக்கிறார்.

இந்தி தவிர்த்த பிற மொழிகளின் முக்கியத்துவத்தை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மாநில மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே சென்றடைய முடியும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, எந்த மொழி பேசும் மக்களும் அவர்களின் சொந்த மொழி மூலம் தான் அவர்களின் கருத்துக்களை தங்கு தடையின்றி வெளிப்படுத்த முடியும் என்பதையும் உணர வேண்டும்.

மத்திய அரசின் ஆணைகளும், அறிவிப்புகளும் மக்களை அவர்களின் மொழியில் சென்றடையவும், மக்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு அவர்களின் தாய்மொழியில் தெரிவிக்கவும் வசதியாக எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 19.11.1998 அன்று டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டை பாமக நடத்தியது. அம்மாநாட்டிற்கான அழைப்பிதழை எட்டாவது அட்டவணையிலிருந்த 18 மொழிகளிலும் (அப்போது எட்டாவது அட்டவணையில் 18 மொழிகள் மட்டுமே இருந்தன) பாமக தயாரித்திருந்தது. அந்த அழைப்பிதழைப் பார்த்து வியந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தும் அது நிறைவேறவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அதற்கான அனுமதியை குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இன்னும் வழங்கவில்லை.

தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகள் மற்றும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று பாமக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அக்கோரிக்கைகளுக்கு பயனில்லாத நிலையில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், அவ்வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்காமல் தேவையற்ற தாமதம் செய்து வருகிறது.

அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. ஆனால், தொலைத்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து விட்ட நிலையில் இப்போது எந்த சிக்கலும் இல்லை.

உதாரணமாக தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டால் மத்திய அரசின் அனைத்து ஆணைகளும், அறிவிப்புகளும் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும். இவற்றை மொழிபெயர்ப்பதில் இப்போது எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. சென்னையில் உள்ள மத்திய அரசின் ஊடக அலுவலகங்கள் மூலமாகவே இவற்றை சிறப்பாக மொழிபெயர்க்கலாம். இதேபோல் மற்ற மாநில மொழிகளிலும் எளிதாக மொழிமாற்ற இயலும். மேலும், ஆட்சி மொழிக்கான அனைத்துத் தேவைகளையும் இப்போது எளிதாக நிறைவேற்ற முடியும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க இப்போது தேவைப்படுவது மத்திய அரசின் அனுமதி ஒன்று மட்டுமே. மாநில மொழி பேசும் மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே அணுக முடியும் என்ற அளவுக்கு முதிர்ச்சியான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் எந்த தடையும் இருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், ''இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x