

தமிழகத்தில் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் இடம்பெற்றுள்ள விபரம்:
சமையல் எரிவாயு பொதுமக்களின் இன்றியமையா தேவைகளுள் ஒன்று. எனவே அது மக்களின் தேவைக்கேற்ப கிடைக்க வேண்டும். இந்நிலையில் சமையல் எரிவாயுவிற்கு நேரடி மானியம் வழங்குவது என்பது பொருத்தமான முடிவு அல்ல.
மேலும் மத்திய பெட்ரோலியம் மற்று இயற்கை எரிவாயு துறை, சமையல் எரிவாயுவிற்கு நேரடி மானியத்தைப் பெற ஆதார் எண் அவசியம் என கூறியுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் மந்தமாக நடந்து வரும் நிலையில் சமையல் எரிவாயுவிற்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை அமல் படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு இத்திட்டத்தை எதிர்ப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே பிரதமருக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று கடிதம் எழுதியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.